பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

நாடக மேடை நினைவுகள்


எல்லோரும் வெறுக்கிறார்கள். ஆகவே இப்படிப்பட்ட வேஷங்களில் பெயரெடுப்பது கடினமே. அன்றியும் வசந்தசேனை நாடகப் பாத்திரத்தைத் தக்கபடி நடிப்பது சுலபமல்ல. பத்மாவதியின் தோழியாயிருந்து புருஷோத்தம மகாராஜாவைத் தன் மோகவலைக்குள் சிக்கச் செய்து, அதனால் பத்மாவதியின் வைரியாகி, கேசரிவர்மன் என்னும் தன் சோரநாயகனுக்குதித்த வசந்தனை, மகாராஜாவின் மைந்தன் என்று எல்லோரும் நம்பும்படிச் செய்து, எங்கு தன் சூது வெளியாகி விடுகிறதோ என்னும் பயமொரு பக்கமும், மகாராஜா எங்கு பத்மாவதியிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறாரோ என்னும் பயம் இன்னொரு பக்கமும் உடையவளாய், சூழ்ச்சியின்மேல் சூழ்ச்சி செய்து கொண்டு, தன் நிலையைக் காப்பாற்றப் பார்க்கும் ஒரு ஸ்திரீ வேடம் பூண்டு தக்கபடி நடிப்பது, மிகவும் கடினமென்றே நான் கூற வேண்டும். இப்படிப்பட்ட, எவரும் விரும்பாத வேடத்தை முதல் முதல் எங்கள் சபையில் அன்று பூண்டவர், ம. கந்தசாமி முதலியார் என்பவர். இவர் அக்காலத்தில் என் தமயனார் ஆறுமுக முதலியாருடன், சென்னை கவர்ன்மென்ட் கலாசாலையில் படித்தவர். அதன் மூலமாக எனக்கு இவரைத் தெரிய வந்தது. எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் இவர் எங்கள் சபையில் மிகவும் சில நாடகங்களில்தான் நடித்தார். பிறகு எங்கள் சபையைவிட்டு நீங்கிவிட்டார். அதன் பிறகு சில நாடகக் கம்பெனிகளிற் சேர்ந்து என்னுடைய முக்கியமான சில நாடகங்களை அவர்சளுக்குக் கற்பித்தார்; இங்ஙனமே சில பால நாடகக் கம்பெனளிலும் சிறுவர்களுக்கு அவைகளைக் கற்பித்தனர். தற்காலம் சிங்கப்பூர், மலேயா பிரதேசங்களுக்கும் போயிருந்து இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறார்.

இவர் வசந்தசேனையாக ஒத்திகைகள் நடத்தும் பொழுது நேரிட்ட சிறு நகைப்புக்கிடமான சமாச்சாரம் ஒன்று கூற விரும்புகிறேன். இவருக்கு சாதாரணமாகப் பேசும் பொழுது இடது தோளைச் சற்று அடிக்கடி தூக்குகிற வழக்கம் உண்டு. இவ்வழக்கம் நாடகமாடும் பொழுதும் வந்தால் நலமாயிராதென்று, அதை அகற்றும்படி எவ்வளவு சொல்லிப் பார்த்தும், அவரால் அதை விடமுடியவில்லை . அதன்மீது ஒரு யுக்தி செய்தேன். இவர் அனுமதியின்மீது இவர் ஒத்திகை செய்யும்