பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

147


பொழுதெல்லாம், இவருக்குப் பின்பக்கமாக அங்கத்தினரை நிற்கச்செய்து இவர் தன்னையுமறியாதபடி இடது தோளை உயர்த்தும் பொழுதெல்லாம், மெல்ல அத்தோள் மீது ஒரு குட்டு குட்டச் செய்தேன்! பல ஒத்திகைகளில் இவ்வாறு செய்து வந்தபடியால், இவ்வழக்கத்தைப் பெரும்பாலும் விட்டனர்! ஆயினும் முற்றிலும் விடாதபடியால் நாடக தினத்தில், மேற்சொன்னபடி செய்வதற்கில்லாமையால், பக்கப்படுதாவண்டையில் (side wing) ஒருவரை நிறுத்தி, எப்பொழுதாவது இடது தோள் உயர்த்தும்படி நேரிட்டால், ஊம்காரம் செய்து அதைத் தடுக்க ஏற்பாடு செய்தேன். இதை இவ்வளவு விவரமாக இங்கு நான் கூறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சில ஆக்டர்கள், மேடையின்மீது, கையை முன்னால் கட்டிக்கொள்வது, கண்களை எந்நேரமும் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருப்பது, வேஷ்டியை அல்லது ஆடையை எந்நேரமும் பற்றிக்கொண்டிருப்பது முதலிய வழக்கங்கள் உடையவளர்களாயிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவைகளெல்லாம் நாடகத்தின் அழகிற்குப் பொருத்தமானவைகள் அல்லவென்றும், அவைகளை எளிதில் மேற்சொல்லியபடி நிவர்த்திக்கலாம் என்றும் என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டேயாம். மொத்தத்தில் அன்றிரவு கந்தசாமி முதலியார் வசந்தசேனையாக நடித்தது நன்றாயிருந்ததெனவே சொன்னார்கள். ஆயினும், பிறகு அநேகம் ஆக்டர்கள் இந்த வசந்தசேனைப் பாத்திரத்தை ஆடிய போதிலும், இந்தப் பாத்திரத்தில் மிகவும் நன்றாய் நடித்து, நற்பெயர் எடுத்தவர், இதற்குச் சில வருஷங்கள் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்த டி.சி.வடிவேலு நாயகரே. இவரைப்பற்றிப் பிறகு நான் எழுதவேண்டிவரும். வசந்தன் வேடம் பூண்ட ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி நான் அதிகமாய் எழுத வேண்டியதில்லை. எப்படி விஜயாள் பாத்திரம் சி. ரங்கவடிவேலு முதலியாருக்காக எழுதினேனோ, அப்படியே இவருக்கென்றே இப்பாத்திரம் எழுதப்பட்டதால், இதை அவர் எளிதில் நன்றாய் நடித்தார் என்று சொல்லலாம். இவர் பைத்தியக்காரனைப்போல் நடிப்பதற்கு அவ்வளவாகப் பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதிருந்தது. தற்காலத்தில் இந்த வேஷம் பூணுபவர்கள் பல பாட்டுகளைப் பாடுகிற வழக்கமாயினும், அச்சமயம் இவர் ஒரு பாட்டும் பாடவில்லை .