பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

153


ஒத்திகைகள் செய்யும் பொழுது கூட நடித்து வந்தார். கடைசியில், நாடகத்திற்காக விக்டோரியா பப்ளிக்ஹாலுக்குப் பணம் கட்டின பிறகு, யாதோ ஒரு காரணத்தால் அப் பாத்திரத்தை நடிக்க முடியாது என்று கை விட்டார். அச்சமயத்தில் நான் இதற்கென்ன செய்வது. என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, என்தமயனார் ஆறுமுக முதலியார், “நீ கலவரப்படவேண்டாம், நான் அதை எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறி, அதை எடுத்துக்கொண்டார். தனக்கு ஞாபக சக்தி குறைவாக இருந்த போதிலும், இரண்டு மூன்று தினங்களுக்குள் கஷ்டப்பட்டு அப்பாகத்தைக் குருட்டுப்பாடம் செய்து, அன்றைத்தினம் நாடகத்தில் நடித்தார். இவர் சாதாரணமாக நாடக மேடையில் நடிப்பதுமில்லை; நடிக்க வேண்டும் என்னும் இச்சையுடையவருமன்று. ஆயினும் ஏதாவது சமயத்திற்கு உதவ வேண்டுமென்றால் கைகொடுப்பார். இத்தகைய நற்குணத்தினாலே, எங்கள் சபையின் அங்கத்தினரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்து ஏறக்குறைய இருபது வருடங்களுக்குமேல் எங்கள் சபையின் காரியதரிசியாக வருடாவருடம் நியமிக்கப்பட்டார்.

பௌத்தாயனன் வேடம், மர்க்கன்டைல் பாங்கில் காஷியராக இருந்த, தமிழில் பல நாடகங்களை இயற்றிய, எனது நண்பராகிய ம. முருகேச முதலியார் எடுத்துக்கொண்டார். இவர் இதற்குப் பிறகு எனது அனேக நாடகங்களுக்கு, பாட்டுகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்; ஏதாவது தமிழ் நாடகத்திற்கு மெட்டுகளும் பாட்டுகளும் வேண்டுமென்றால் எங்கள் சபையின் தமிழ் ஆக்டர்களெல்லாம் இவரை நாடுவது வழக்கம்; இவரும் கஷ்டம் ஒன்றும் பாராமல் கேட்பவர்களுக்கெல்லாம் பாட்டுகளைக் கட்டிக்கொடுத்துக் கொண்டு வந்தார். இதற்காக இதன் மூலமாக, என் வந்தனத்தை இவருக்கு நான் செலுத்துகிறேன்.

நீலவேணியாக அன்றைத்தினம் செங்கல்வராய ஐயர் நடித்ததாக முன்பே கூறியுள்ளேன். இந்நாடகப் பாத்திரமானது ஒரு சிறுபாகமே. அக்காரணம்பற்றி, இந்நாடகம் எத்தனை முறை எங்கள் சபையில் நடிக்கப்பட்டிருக்கிறதோ, அத்தனை முறை வேறு வேறு ஆக்டர்கள் நடித்தார்கள் என்றே ஒருவாறு சொல்லலாம். யாராவது புதிதாக எங்கள் சபையில் ஸ்திரீபாகம் எடுத்துக்கொள்ளத் தக்கவர்கள் வந்தால், அவர்களுக்கு முதல்