பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

நாடக மேடை நினைவுகள்


முதல் இந்த வேஷம்தான் கொடுப்பது வழக்கமாயிருந்தது; இப்பொழுதும் இந்த வழக்கம் முற்றிலும் அற்றுப்போகவில்லை. இந்த நீலவேணியின் பாகத்தைப் பற்றிய சிறு நகைப்புக்கிடமான கதையொன்றுண்டு. இம் மனோஹரன் எனும் நாடகத்தை ஒரு நாள் நான் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தபொழுது புராம்டராக (Prompter), அதாவது, ஒரு பக்கமாக புஸ்தகத்தை வைத்துகொண்டு நாடகப் பாத்திரங்கள் ஏதாவது மறந்துபோனால் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டியவராக வேறொருவரும் அன்று கிடைக்காதபடியால், எனது பழைய நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடுவை அத் தொழிலைப் பார்க்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர் அதற்கு முகவாட்டத்துடன் இசைந்தார். இதற்குக் காரணம் அவருக்குத் தமிழ் நன்றாய்ப் படிக்க வராது என்பதே. வீட்டில் அவர் பேசுவது தெலுங்கு பாஷையே. ஒரு சந்தர்ப்பத்தில், “பிறகு யார் பேச வேண்டும்?” என்று நான் கேட்க, அவர் புஸ்தகத்தைப் பார்த்து ‘கோழி’ என்று பதிலளித்தார்! இதென்னடா, கோழி என்கிற நாடகப் பாத்திரம் ஒன்று இதில் எழுதினோமா என்னவென்று நான் ஆச்சரியப்பட்டு, புஸ்தகத்தை வாங்கிப்பார்த்த பொழுது “தோழி” என்றிருந்தது. ‘தோ’ என்கிற எழுத்தின் கால் கொஞ்சம் குட்டையாக எழுதியிருந்தபடியால் அவர் தோழியைக் கோழியாக்கினார்! இதைக் கேட்டதும் எங்களுக்கெல்லாம் பெரும் நகைப்பு உண்டாயிற்று. அது முதல் பல வருடங்கள் வரை, தோழியாக நடிக்கும் ஆக்டர்களை எல்லாம் ‘கோழி கோழி’ என்று நாங்கள் ஏளனம் செய்வது வழக்கமாயிருந்தது.

இனி நான் மனோஹரனாக நடித்ததைப்பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் இதுவரையில் நாடக மேடையில், என்னிடம் இருக்கும் குறிப்பின்படி சுமார் 75 வேடங்களைத் தரித்திருக்கிறேன். அவற்றுளெல்லாம் எனக்கு அதிக தேக சிரமத்தைக்கொடுப்பது இந்த மனோஹரன் பாகமே. இதைவிட, அமலாதித்யன், பௌத்தர் முதலிய நான் ஆடிய நாடகப் பாத்திரங்கள், நடிப்பதற்குக் கஷ்டமானவைகளே; ஆயினும் கேவலம் தேக சிரமத்தை மாத்திரம் கருதுமிடத்து மனோஹரன் தான் மிகவும் கஷ்டத்தைத் தருவது. நான் குழந்தைப் பருவமுதல் மிகவும் பலஹீனமுடையவனாயிருந்தேன் என்று என் தாய் தந்தையர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான்