பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

155


வாலிபனான பிறகு, “இவன் முப்பது வயதுக்குமேல் உயிருடன் இருக்க மாட்டான்” என்று ஒருவர் கூறினார். எப்பொழுதும் நான் தேக புஷ்டியுடையவனாயிருந்ததில்லை; சாதாரணமான ஆயுர்வேதிகள் என்னை “ஒற்றை நாடி” உடையவன் என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம், என் இருதயம் பலமுள்ளதாயிராமையே என்று எண்ணுகிறேன். என்னுடைய 17ஆம் வயதில், என் ஹிருதயத்தைப் பரிசோதித்து, அக்காலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வைத்தியராகிய டாக்டர் வரதப்ப நாயுடு என்பவர், “நீ கிரிக்கெட், (Cricket) முதலிய கஷ்டமான தேகப்பயிற்சி எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று கூறினார்; கிரிக்கெட் ஆடுவதை விட்டு, டெனிஸ் (Tennis) ஆட ஆரம்பித்தேன்; கொஞ்ச காலம் பொறுத்து அதையும் விடவேண்டுமென்று சொன்னார். அதை விட்டு சைக்கில் (Cycle) ஏறப் பழகி வந்தேன். இன்னொரு வைத்தியர் அதையும் விடவேண்டுமென்றார். அதைவிட்டு அன்று முதல் இன்று வரை காலால் நடப்பதையே தேகப்பயிற்சியாகக் கொண்டுவருகிறேன்; இதனுடன் நிற்கவில்லை; என்னுடைய இருபத்தைந்தாம் வயதில் டாக்டர் கோமன் (Koman) என் ஹிருதயத்தைப் பரிசோதித்து, “நீ நாடக மேடையில் ஆடக்கூடாது” என்று தெரிவித்தார்! மற்றெல்லாவற்றையும் விடும்படி வைத்தியர்கள் கூறியபொழுது, எனக்கு அவ்வளவாகத் துக்கமில்லை நாடகமாடுவதை விடு என்று டாக்டர் கோமன் சொன்னபொழுது, இடி விழுந்தவன் போல் ஆனேன்! இன்னும் சில வைத்தியர்களைப் பார்த்த பொழுது, அவர்கள், “நாடகமாடுவதில் உன்னை அதிகமாக அலட்டிக் கொள்ளக்கூடாது” என்று கூறினார்கள். நான் என்ன செய்வது? நாடகமாடுவதில் எனக்குள்ள ஆசையானது அதை விடுவதற்கு எனக்கு மனோதிடம் கொடுக்கவில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்னும் பழமொழியையே உறுதியாகக் கொண்டு “ஈசனே! நாடகமாடுவதில் பாபமொன்று மில்லை. நீர் படைத்த சில மனிதர்களுக்காவது சிறிது காலம் கொஞ்சம் சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறேன் என்று உறுதியாய் நம்புகிறேன். ஆகவே, அடியேனைக் காப்பது உமது பாரம்!” என்று அவர்மீது பாரத்தைச் சுமத்தி, நாளது வரையில் நாடகமாடி வருகிறேன். இதுவரையில், என் குறிப்பின்படி ஐந்நூறு முறைக்குமேல் நாடக மேடையில் நடிக்கும்படி செய்தது அவரது கருணையே என்று நிச்சயமாய் நம்புகிறேன்.