பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

நாடக மேடை நினைவுகள்


அன்றியும் இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயமும் கூற விரும்புகிறேன். இதைக் கூறுவதற்காக இதை வாசிக்கும் எனது நண்பர்கள் மன்னிப்பார்களாக. நாடக மேடையில் என் அனுபவங்களையெல்லாம் ஒன்றும் விடாது கூற வேண்டும் என்று நான் நிச்சயித்திருக்கிறபடியால் இதை இங்கு எழுதலானேன். எனது பதினெட்டாவது வயது முதல் எனக்குக் குடல் வாதம் (Hernia) வியாதியுண்டு. அதற்காக வைத்தியர்கள் கட்டளைப்படி ஒரு டிரஸ் (Truss) இடுப்பில் அணிந்து வருகிறேன். இதனால் இம்மனோஹரனாக நடிக்கும் பொழுது “சங்கிலி அறுக்கும் காட்சி” என்னும் காட்சியில், என் உயிரை ஹானிக்குட்படுத்தியே நடிக்கிறேன் என ஒருவாறு நான் கூறவேண்டும்; அச்சமயத்தில் என் டிரஸ் உடையுமாயின், என் உயிருக்கே ஹானிதான் என்பதை இதை வாசிக்கும் வைத்திய சாஸ்திரம் உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வளவுமிருந்தும் இதுவரையில் இம்மனோஹரன் வேடம் பூண்டு, ஏறக்குறைய நாற்பது முறைக்குமேல் ஒரு அபாயமுமின்றி நடிக்கச் செய்தது கடவுளின் கருணையே என்று உறுதியாய் நம்புகிறேன். 1895ஆம் வருடம் முதல் 1928ஆம் வருடம் வரையில் எங்கள் சபையில் இந்நாடகத்தில், நான் ஒருவனே மனோஹரன் வேடம் பூண்டு நடித்து வந்தேன். அதன் பிறகு என் இளைய நண்பர், வி.சி.கோபாலரத்னம் ஐயங்கார், எங்கள் சபையில் இவ்வேடம் பூண்டார். அவருக்குப்பின் எஸ். சத்யமூர்த்தி ஐயர் இவ்வேடத்தில் நடித்திருக்கிறார். அன்றைத் தினம் நான் மனோஹரனாக நடித்தது நன்றாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தார்கள் என்றே நான் கூற வேண்டும். அவையடக்கத்தைச் சற்று அகற்றி, உண்மையை உரைக்குமிடத்து, இப்பாத்திரம்தான் எனக்கு நாடக மேடையில் பெரும் பெயரைக் கொண்டு வந்ததெனக் கூற வேண்டும்.

நான் அன்றிரவு நாடகம் ஆடியபொழுது நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு வரைகிறேன். “சங்கிலி அறுக்கும் காட்சி” மேலே விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்தபோது, கீழே உறங்கிக்கொண்டிருந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சூபரின்டென்டென்டாகிய எல்லிஸ் (Ellis) துரை, மேலே ஏதோ கலகம் நடக்கிறதென்று பயந்து, தன் வயோதிகத்தையும் பாராமல் மேல்மாடிக்கு ஓடிவந்தார்! மறு நாள் என்னைச் சந்தித்தபொழுது, “என்ன மிஸ்டர் சம்பந்தம்!