பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

157


நேற்றிரவு அவ்வளவு காபுரா பண்ணிவிட்டாயே!” என்று நகைத்துக்கொண்டு கேட்டார்.

இந்த நாடகம் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம், எங்கள் சபைக்குப் பெரும்பெயரைக் கொண்டு வந்ததெனக் கூற வேண்டும். இவ்வொரு நாடகத்தினால் எங்கள் சபைக்குச் சுமார் 16,000 ரூபாய் வசூலாகியிருக்கிறது. அன்றியும் தென் இந்தியாவிலுள்ள எல்லாத் தமிழ் நாடகச் சபைகளும், நாடகக் கம்பெனிகளும், (ஸ்திரீகள் கம்பெனிகள் பாலர் கம்பெனிகள் உட்பட) இதை நடத்தியிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

இந்த மனோஹரன் வேடத்தை எப்படி நன்றாய் நடிப்பது என்று என்னை அநேகர் கேட்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்தப் பதிலைத்தான் நான் கூறுவேன். இந்த இடத்தில் இப்படி நிற்க வேண்டும், இந்த இடத்தில் இப்படி உட்கார வேண்டும், இந்தச் சந்தர்ப்பத்தில் நகைக்க வேண்டும், இந்தச் சந்தர்ப்பத்தில் கோபாவேசங்கொள்ள வேண்டும் என்பது முதலானவைகள் எல்லாம் எளிதில் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். இதில் கற்பது கடினமானது என்னவென்றால், மனோஹரன் தன் தாய் தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே. இது ஒருவன் சொல்லிக் கொடுத்து வருவதல்ல. சுயானுபவம் இருந்தால்தான் வரும். “என்னைப் பெற்ற தாய் தந்தையரன்றி எனக்குப் பிறிதொரு தெய்வமில்லை” என்று மனோஹரன் கூறியவாறு, அக்கோட்பாட்டை உறுதியாய்க் கொண்டு உலகில் ஒழுகுபவர்கள் மாத்திரம்தான், இந்த வேடத்தை நன்றாய் நடிக்கச் சக்தியுள்ளவர்கள் என்பது என் தீர்மானமான எண்ணம். அக்கொள்கையில்லாதவர்கள் எவ்வளவு நன்றாய் நடிக்க முயன்றாலும், பார்ப்பவர்களுக்கு முழு திருப்தியை விளைக்க முடியாதென்பது என் அனுபவம்.


இனி இந்நாடகத்தில் மனோஹரனாக நடிக்க விரும்புவோர்கள், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் கூற வேண்டியவனாயிருக்கிறேன். நான் முதல் முதல் அன்றையத் தினம் இவ்வேடத்தில் நடித்தபொழுது “பிள்ளையார் குட்டாக” ஒன்று நேர்ந்தது; சங்கிலியறுக்கும் காட்சியில், மேடையின்மீது அரச சபையிலுள்ளவர்களாகிய உத்தியோகஸ்தர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு புருஷோத்தம மகாராஜாவின்மீது கையில் வாள் கொண்டு பாய யத்தனிக்கும்