பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

நாடக மேடை நினைவுகள்


பொழுது, அக்கோபாவேசத்தில் அருகிலிருந்த மந்திரி சத்யசீலராக வேடம் தரித்த எனது நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்காரை அகஸ்மாத்தாய்க் காயப்படுத்தினேன். அது முதல் பன்முறை இக்காட்சியில் அநேகம் பெயருக்குக் காயப்படுத்தியிருக்கிறேன். அதன் பேரில் நிஜமான வாளைக் கையிலெடுத்தால் அக்காட்சியில் அரண்மனை உத்யோகஸ்தர்களாக வர யாவரும் அஞ்சத் தலைப்பட்டனர். பிறகு அவர்கள் ஆட்சேபிப்பது நியாயம்தான் என்று ஒப்புக் கொண்டு, சிலசமயங்களில், மரத்தினால் செய்த கத்தியை உபயோகப்படுத்திப் பார்த்தேன். அதைக் கொண்டும் ஒரு முறை என்னைத் தடுக்க வந்தவர் ஒருவருக்கு ‘ஊமை வடு’ உண்டாக்கினேன்! ஒவ்வொரு முறையும் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று தீர்மானித்தும், எனது நண்பர்கள் இக்காட்சி ஆரம்பிக்குமுன் ஜாக்கிரதையாக இருக்கும்படி எவ்வளவோ எச்சரிக்கை செய்தும், சில சமயங்களில் என்னையும் மறந்து யாருக்காவது காயப்படுத்தியதுண்டு. ஒரு முறை சத்யசீலராக வந்த எனது நண்பர் ஷண்முக முதலியாருக்கு என் கைவாளினால் காயமுண்டாக்க, மேடையின்மீது ரத்தம் சொரிய ஆரம்பித்து விட்டது; என்ன செய்வார் பாபம்! அக்காட்சியைக் கெடுக்க மனமில்லாதவராய் காட்சி முடிந்தவுடன் அரங்கத்தைவிட்டு விலகிப் போய் சிகிச்சை செய்து கொண்டார். நான் அதைக் கண்டு மிகவும் மனவருத்தப்பட்டு, அவருடைய மன்னிப்பைக் கேட்டேன். நான் எவ்வளவு மன்னிப்பைக் கேட்டும் காயம் பட்டது பட்டதே! ஆகவே இந்நாடகத்தில் மனோஹரனாக நடிக்க விரும்பும் ஒவ்வொரு வருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இக்காட்சி யில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே. இக்காட்சி, எனக்கும் மற்றவர்களுக்கும், ஒரு கெடுதியுமின்றி முடிவு பெறும்போதெல்லாம் ஈசனுக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

இந்நாடகம் அன்றைத் தினம் முடிவு பெறுவதற்கு 5½ மணி சாவகாசம் பிடித்தது; சில சமயங்களில் வெளியூர்களில் இதை நாங்கள் ஆடியபொழுது 6 மணி நேரமும் பிடித்திருக்கிறது. இது மிகவும் பெரியதாயிருக்கிறதெனத் தீர்மானித்து, அவசியமாக இல்லாத சில பாகங்களைக் குறுக்கி கடைசியாகப் பதிப்பித்த இரண்டு மூன்று பதிப்புகளில், நான்கு மணிநேரத்தில் முடியும்படியானதாகச் செய்து அச்சிட்டிருக்கிறேன். இதை ஏன் இப்படிக் குறைத்து விட்டாய் என்று எனது நண்பர்கள் சிலர்