பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

159


என் மீது குற்றஞ் சாட்டியிருக்கின்றனர். ஆயினும் அவ்வாறு இந்நாடகத்தைக் குறுக்கியதன் முக்கியக் காரணம் எங்கள் சபையார், இரவில் நாடகங்கள் ஆடுவதை விட்டு, சாயங்காலங்களில் நாடகங்களை நடத்துவதேயாம் என்று அறிவார்களாக; சாயங்காலங்களில் நாடகங்களாடும் பொழுது சுமார் 9 மணிக்குமேல், நாடகம் முடிவது நலமென்றெண்ணி, இப் புஸ்தகத்தில் ஏறக்குறைய 45 பக்கங்களுக்குமேல் குறைத்து விட்டேன்.

எங்கள் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் நடத்திய பொழுதுதெல்லாம் லீலாவதி சுலோசனாவும், இம் மனோஹரனும் எப்பொழுதும் ஆடப்பட்டு வந்திருக்கின்றன. பெரும்பாலும் இவ்விரண்டிலொன்றையே ஆரம்ப நாடகமாக வைத்துக் கொள்வது எங்கள் வாடிக்கை. “லீலாவதி-சுலோசனா” வைப்போலவே, இந்நாடகமும் சில கலாசாலைகளில் பாடப் புஸ்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. இனி இம் மனோஹரன் நாடகமானது இதர சபையோர்களாலும் நாடகக் கம்பெனிகளாலும் ஆடப்பட்டதைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன்.

நான் பார்த்ததற்குள் நாடகக் கம்பெனிகளில் வேலு நாயர் என்பவரே இம் மனோஹரன் வேடத்தை என் மனத்திற்குத் திருப்தியாகப் பூண்டிருக்கிறார். ஆயினும் இவர் இவ் வேஷம் தரிப்பதில் ஒரு முக்கியமான குறையை மாத்திரம், தமிழ் நாடக மேடையின் அபிவிருத்தியின்பொருட்டுக் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இவர் உடுக்கும் உடை மாத்திரம் இந்தப் பாத்திரத்திற்கு ஏற்றதன்று. ஸ்காட்லாண்டு தேசத்திலிருப்பவர்கள் உடுக்கும் ஹைலாண்டு ஸ்கர்ட் (Highlander's skirt) மாதிரியாக முழங்காலளவு ஓர் ஆடையை உடுத்தி நடிக்கிறார். இது என்ன காரணம் பற்றியோ அறிகிலேன். இதை இந்த வேஷத்தில் அணிவது உசிதமல்லவென்றே எனக்குத் தோன்றுகிறது. இம்மாதிரியான உடைகள் நமது பூர்வீகர்கள் உடுத்ததாக எங்கும் சொல்லப்படவில்லை. காலுக்கு ஜல்லடம் போன்ற உடையே உடுத்தல் நியாயமாகும். ஜல்லடம் மாத்திரம் அக்காலத்தில் இருந்ததோ என்று இதைப் படிப்பவர்கள் சந்தேகப்பட வேண்டாம்; பூர்வகாலத்தில் இடுப்பு முதல் கால் வரைக்கும் அணியும் உடைகளிருந்திருக்கின்றன. சங்க காலத்தில் அதற்கு ‘வட்டுடை’ என்று ஒரு பெயர் உண்டு. சில பாட்டுகளை மாத்திரம் அதிகமாய்ச் சேர்த்த போதிலும், வசனத்தில் ஒன்றும் மாற்றாமலும், அதிகமாய்ச்