பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

நாடக மேடை நினைவுகள்


இப்பாத்திரம் பத்மாவதியைப் போல் நாடகத்திற்கு அவ்வளவு முக்கியமானதல்லவென்பதே. விஜயாள் பாத்திரமல்லாமல் மனோஹரன் நாடகத்தை நடத்தி முடிக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறே நடத்தி முடிக்க யத்தனம் செய்தேன் (அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன்). மனோஹரனைக் கதாநாயகனாகக் கொண்ட போதிலும், மனோஹரன் மனைவி கதாநாயகி என்று கொள்ளலாகாது. ஷேக்ஸ்பியர் மஹா நாடகக்கவி எழுதிய ஜுலியஸ் சீசரின் மனைவி கதாநாயகியாவளோ? மனோஹரன் நாடகத்தில் பிரதான ஸ்திரீ பாகம் பத்மாவதியே என்று அதை ஒரு முறை வாசித்தவர்களும் ஒப்புக்கொள்வார்கள். அப்படியிருக்க, இந்நாடகத்தை ஆடுவதற்கு எடுத்துக்கொள்ளும் எல்லாச் சபையாரும் பெரும்பாலும், விஜயாள் பாத்திரத்தை அதன் ஸ்திரீ வேடம் தரிக்கும் ஆக்டருக்கே கொடுப்பது வழக்கமாய் விட்டது.

முக்கியமாக நாடகக் கம்பெனிகளில் இது மாமூலாய் விட்டது. இதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர்களெல்லாம் இந்நாடகத்திற்கு மனோஹரன் கதாநாயகன், ஆகவே மனோஹரன் மனைவி கதாநாயகியாக வேண்டுமென்று எண்ணுவதே என்று நினைக்கிறேன். முதலில் மனோஹரன் இந்நாடகத்திற்குக் கதாநாயகன்தானா என்பதே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அது எப்படியிருந்த போதிலும் மனோஹரன் மனைவி கதாநாயகியல்ல வென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. இச் சந்தர்ப்பத்தில் கதாநாயகி என்கிற பதத்தைக் கதையின் முக்கியமான பாத்திரம் என்னும் அர்த்தத்தில் உபயோகிக்கின்றேன் என இதை வாசிப்பவர்கள் அறிவார்களாக. இன்னொரு காரணம், காலஞ்சென்ற என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடித்ததே என்று தோற்றுகிறது. இப்பாத்திரம் நான் முன்பே குறித்தபடி முக்தாநாயகி பிரிவினைச் சார்ந்தது. அப்படியிருக்க, மனோஹரன் தாயாராக இருக்கக்கூடிய ரூபமுடையவர்கள் இப்பாத்திரத்தை எடுத்துக் கொள்வது ரச ஆபாசமாம். அன்றியும் ஸ்திரீ நாடகக் கம்பெனிகளில், ஸ்திரீகள் இப் பாத்திரத்தைப் ப்ரௌடா நாயகியாக நடிக்கிறார்கள், பெரும்பாலும்; இது முற்றிலும் தவறெனவே நான் எடுத்துக் காட்ட வேண்டியவனாயிருக்கிறேன்.