பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

நாடக மேடை நினைவுகள்


கிறேன். என்னுடன் நாடக மேடையில் நடிப்பவர்களுடைய பாண்டித்தியத்தைப்பற்றி அளவிட என்னிடம் ஒரு கருவியுண்டு - அதாவது அவர்கள் என்னுடன் நடிக்கும் பொழுது, எனக்கு மனமகிழ்ச்சி கொடுக்கின்றார்களா என்பதே. இது சரியோ தவறோ நான் அறிகிலேன். இது தவறன்று என நான் கூறவேண்டும். ஏனெனில், அருகில் உடன் நடிக்கும் ஆக்டர் எனக்குத் திருப்தியைத் தராவிட்டால், அரங்கத்திற்கு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஜனங்களுக்கு எப்படி திருப்திகரமாயிருக்கக் கூடும்? இதைக் கொண்டு நான் அளவிடுவதானால், என்னுடன் பத்மாவதியாக நடித்த ஆக்டர்களுக்குள் எல்லாம், பத்மநாபரே மிகவும் மேம்பட்டவர் என்று நான் சங்கையின்றிக் கூறவேண்டும். இவர் எனது அன்னையாக நடித்தபொழுது எனக்குண்டான மகிழ்ச்சியில், மற்றவர்கள் நடித்தபொழுது ஒரு பாதியும் நான் பெற்றேனில்லை என்பது திண்ணம். இவர், சென்னையில் மாத்திரமன்று; எங்கள் சபை, கொழும்பு திருச்சினாப்பள்ளி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை முதலிய பல வெளி ஜில்லாக்களுக்குப் போய் வந்த பொழுதெல்லாம், இந்நாடகத்தில் பத்மாவதியாக நடித்து, அழியாப் பிரசித்தியை பெற்றார். இவர் பத்மாவதியாக இரும்புச் சங்கிலிகளை அறுக்கும் காட்சியில், அரங்கத்தில் தோன்றியது முதல், சபையோரின் கண்களையெல்லாம் இவரே கவர்வார்; மனோஹரனைக் கவனிப்பதும் இவருக்கு இரண்டாவதாகத் தான் என்றே நான் கூறவேண்டும். இவர் அரங்கத்தை விட்டு நீங்குமளவும் எல்லோரும் இவரையே பார்த்துக் கொண்டிருக்கும்படியாக, அவ்வளவு அற்புதமாக நடிப்பார்! சில வருஷங்களுக்கு முன் இவர் பத்மாவதியாக நடித்தபொழுது இப்பொழுது வந்திருக்கும் சினிமா (Cinema) கம்பெனிகள் அக்காலத்தில் இருந்திருந்தால் அப்படியே சினிமாவில் இந் நாடகத்தைப் படமெடுத்திருந்தால், பத்மாவதியின் வேஷம் இப்படித்தான் நடிக்கப்பட வேண்டுமென்று, நாடக உலகமானது அறிந்திருக்கும். அப்பேறு கிடைக்காமற் போனது தென் இந்திய நாடக மேடையானது செய்த தௌர்ப்பாக்கியமே என்று எண்ணுகிறேன்.

நான் மேலே குறித்தபடி அவ்வளவு முக்கியமான பாத்திரமாகிய இப்பத்மாவதி. பாத்திரத்தை, நாடகக் கம்பெனிகளில் பெரும்பாலும் இருப்பவர்களுக்குள் முக்கியமான ஆக்டருக்குக்