பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

165


கொடுப்பதை விட்டு, இரண்டாவது மூன்றாவது தரமான ஆக்டர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். அப்படிச் செய்வது அவர்கள் இந்நாடகத்தின் முக்கிய சாராம்சத்தைக் கிரகிக்காததனால் என்பதற்குச் சந்தேகமில்லை. இனியாவது இந்நாடகத்தில் இப்பாத்திரத்தின் மகிமையை நன்கு உணர்ந்து, முக்கியமான ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்கே இதைக் கொடுப்பார்களாக.


இந்தப் பத்மாவதி பாத்திரத்தை விட்டு அகலுமுன் ஒரு விஷயத்தைக் குறிக்க விரும்புகிறேன். பத்மாவதி வேஷம் தரிப்பவர்கள் பாடுவதில் தவறில்லை; சில சந்தர்ப்பங்களில் பாடுவது மிகவும் பொருத்தமாயுமிருக்கும்; ஆயினும் தக்க சந்தர்ப்பங்களில்லாத இடங்களில் பாடுவது மிகவும் தவறாகும். நான் சில சபைகளிலும் கம்பெனிகளிலும் பார்த்தபடி, “சங்கிலியறுக்கும் காட்சியில்” பத்மாவதி பாடுவது மிகவும் தவறாகும். மனோஹரன் அடங்காக் கோபாவேசங் கொண்டவனாய்த் தன் தளைகளை அறுத்துக் கொண்டு தன் தந்தையின் சிரத்தையே சேதிக்கப்போகும் தருவாயில், பத்மாவதி அச்சபையில் தோன்றி அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “வேண்டாம்” என்று தடுக்கிற சந்தர்ப்பத்தில், பத்மாவதி பாட ஆரம்பிக்கிறாள்! அதற்குப் பதிலாக மனோஹரனும் பாட ஆரம்பிக்கிறான்! இது மிகவும் ரசாபாசமாம்! இக்காட்சியானது வெகு விரைவில் முடிக்கவேண்டியதாயிருக்க, இச்சமயத்தில் இவ்விருவரும் பாடிக்கொண்டிருப்பது மிகவும் அனுசிதமாம். உபாத்தியாயர் வீட்டில் தீப்பற்றிக்கொண்டது என்கிற விஷயத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டிய மாணாக்கன், சங்கராபரண ராகத்தில் சவுக்கமாக ஆதிதாளத்தில் அதைப் பாடி அறிவிப்பதற்குச் சமானமாகும்! இக் குற்றத்தை இனியாவது இந்நாடகத்தை ஆடுபவர்கள் விலக்குவார்களாக. பத்மாவதி பாடவேண்டு மென்றிருந்தால், இதைவிடத் தக்க இடங்கள் இந்நாடகத்தில் அநேகம் இருக்கின்றன.

இதர நாடக சபைகளும் கம்பெனிகளும் இந்நாடகத்தை ஆடும்பொழுது, என் கண்ணுக்குப் புலப்பட்ட இன்னொரு குறையை எடுத்துக் கூறுகிறேன். அது, வசந்தசேனையின் பாகத்தை மிகவும் அற்புதமாகப்பாவித்து நன்கு தேர்ச்சியடையாத ஆக்டர்களுக்கே கொடுப்பதேயாம். இந்தப் பாகத்தை நடிப்பது