பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

நாடக மேடை நினைவுகள்


மிகவும் கடினம் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். இப்பாத்திரம் சரியாக நடிக்கப்படா விட்டால் இந்நாடகமே நன்றாயிராது என்பது என் நம்பிக்கை. இதையும் தக்கபடி தேர்ச்சி பெற்ற ஆக்டருக்கே கொடுத்தாலொழிய நாடகம் சரியாயிராது.

மேற்சொன்னபடியே ‘வசந்தன்’ பாத்திரமும் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமானதே. சாதாரணமாக, நாடகக் கம்பெனிகளில் இவனைக் ‘கோமாளி’யைப்போல் வேஷம் தரிக்கச் செய்து ரசாபாசமாக்குகிறார்கள். பைத்தியக்காரனுக்கும் கோமாளிக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு என்பதை அறியாமல் இவ்வாறு நடத்துவது பெரும் தவறாகும். அன்றியும், வசந்தன் பைத்தியக்காரன்தானே, அவன் என்ன செய்தாலும் பெரிதல்ல என்று நினைக்கிறார்கள். அதுவும் தவறாகும். வசந்தன் பைத்தியக்காரன்தான். ஆயினும் அவனது பைத்தியத்திற்கேற்றபடி என்ன பேசவேண்டுமோ, எப்படி நடிக்க வேண்டுமோ அதை விட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என்று எண்ணுவது பெருங்குற்றமாகும். தப்போ, ஒப்போ நாடகாசிரியன் இந்தப் பாத்திரம் இவ்வளவுதான் பேசவேண்டுமென்று எழுதியிருக்க, அதற்குமேல், சாதாரண ஜனங்கள் சிரிக்கிறார்களேயென்று, அதிகமாக ரசாபாசமான வார்த்தைகளைப் பேசுவது தவறு என்று நான் உறுதியாய்க் கண்டிக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். இந் நாடகத்தில் ‘சங்கிலியறுக்கும்’ காட்சி மிகுந்த வீர ரசமும் சோகரசமும் அமைந்தது. இக்காட்சியில், ஹாஸ்ய ரசத்திற்கு இடமில்லை. அப்படியிருக்க பத்மாவதிதேவி தன் சொந்த மகனை மரிக்கும்படியாகக் கட்டளையிட்டபின், மனோஹரன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தவுடன், எல்லோர் கண்களிலும் நீர்ததும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில், சில ‘வசந்தர்’கள் சபையோரை நகைக்கச் செய்யவேண்டி, ஏதாவது நாடகத்தில் எழுதியிராத வார்த்தைகளைப் பேசி, அல்லது கோமாளிக்கூத்தாய் ஏதாவது சேஷ்டைகள் செய்து ரசாபாசம் விளைத்ததை, நான் என் கண்ணாற் கண்டிருக்கிறேன். அச் சமயங்களிலெல்லாம் எனக்கு உண்டான கோபம் கொஞ்சமல்ல; இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை அறியச் சக்தியற்றவர்களுக்கு இந்நாடகத்தை ஆட ஏன் உத்தரவு கொடுத்தோம் என்றே என்னைப் பழித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலாவது, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வசந்தன் வேஷம் பூணுபவர்கள் இக்காட்சியில்