பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

நாடக மேடை நினைவுகள்


‘இதென்ன ஆச்சரியமாகவிருக்கிறது? இவன் நம்மை இந்தக் கேள்வி கேட்பானேன்?’ என்று யோசித்தவனாய், “என்ன அப்பு, என்ன சமாச்சாரம்? இதை ஏன் நீ கேட்கிறாய்? என்ன உன் மனத்திலிருக்கிறது சொல்!” என்று கேட்டேன். அதன்மீது அவன், நான் சாரங்கதர நாடகத்தை எழுத வேண்டுமென்றும், அதில் நான் சாரங்கதரனாக நடிக்க வேண்டு மென்றும் தான் விரும்புவதாக மெல்லத் தெரிவித்தான். இச்சாரங்கதரன் கதையை முன்பு நான் எங்கேயோ படித்திருந்தேன். கதை என் மனத்துக்கு அருவருப்பைத் தந்தது. அதன் பேரில் அப்புவிடம் அக்கதை என் மனத்திற்குத் திருப்தியாகவில்லை யென்பதை அறிவிக்க, அவன், “வாஸ்தவம்தான். ஆனாலும், நீங்கள் அதையெல்லாம் மாற்றிச் சரியாக எழுதி விடுவீர்கள்” என்று தெரிவித்தான். அதன் பேரில், இவன் இவ்வளவு வற்புறுத்துகிறானேயென்று ‘எல்லாம் பாப்போம்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டேன். சில தினங்களில் இவ்விஷயம் என் மனத்தை விட்டகன்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பிறகு ஒரு நாள் சுந்தராச்சாரி நாடகக் கம்பெனி, கொட்டகையில் நாடகமாடுவதற்குப் பதிலாக ஒரு பெரிய கூடாரம் வரவழைத்து அதில் பச்சையப்பன் கலாசாலைக்கெதிரிலுள்ள மைதானத்தில் நாடகமாடுகிறார்களெனக் கேள்விப்பட்டேன். கூடாரத்தில் நாடகமாடுவதென்றால் விந்தையாகவேயிருந்தது. அதைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டவனாய், அவ்விடம் மறு ஆட்டம் என்னவென்று விசாரிக்க, “சாரங்கதர நாடகம்” என்று கேள்விப்பட்டேன். உடவே அப்பு அதைப்பற்றி எனக்குச் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் ஜெயராம் நாயகர் முதலிய நண்பர்களும் அதைப் பார்க்கப் போனோம். இந்த சுந்தராச்சாரி கம்பெனி யென்பது சுப்பராயாச்சாரி கம்பெனியினின்றும் உற்பவித்ததாம்.

ஹரிச்சந்திரன் நாடகமாடுவதில் பிரசித்திபெற்ற சுப்பராயாசாரியைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். அந்த சுப்பராயாச்சாரி காலமான பிறகு அவரிடம் அரிச்சந்திர விலாசத்தில் சத்யகீர்த்தி வேஷம் போட்டுக்கொண்டிருந்த சுந்தராச்சாரி, தான் ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்தார். அன்றிரவு இந்த ‘சாரங்கதர’ நாடகத்தில், சுந்தராச்சாரி சாரங்கதரனாகவும், அப்பாவுப் பிள்ளை என்னும் சிறுவன் சித்ராங்கியாகவும் நடித்தார்கள். சங்கீதம் அதிகமாகவும், வசனம்