பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

169


கொஞ்சமாகவும் இருந்தது; அவர்கள் மீது குறை கூறிப் பிரயோஜனமில்லை. அது அக்காலத்திய நாடகக் கம்பெனிகளின் வழக்கமாயிருந்தது. இப்பொழுதும் அவ் வழக்கம் போகவில்லையென்று நான் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இவர்கள் இருவரும் நடித்தது சுமாராக இருந்த போதிலும், நான் பார்த்த ஆக்டர்களுக்குள் மிகவும் திருப்திகரமாக நடித்தது கோபாலாச்சாரி என்னும் ஒரு பிராம்மணப் பிள்ளை. நான் பள்ளிக்கூடத்தில் கீழ் வகுப்புகளில் வாசித்த பொழுது, இவனைத் தெரியும். இவனுடன் கிரிக்கெட் ஆடியிருந்தேன். இவன் படிப்பைவிட்டுப் பிறகு இக் கம்பெனியைச் சேர்ந்ததாகக் கேள்விப்பட்டேன். கோபாலாச்சாரி அன்று விதூஷகனாக வேடம் பூண்டு மிகவும் நன்றாய் நடித்தான். அக்காலத்தில் விதூஷகன் வேடம் தரிப்பவர்கள், ஒன்றும் பாடம் செய்ய வேண்டியது நிமித்தமில்லை; சமயோசிதப்படி, அவர்கள் புத்தி சாதுர்யத்துக்கேற்ற வண்ணம், ஹாஸ்யம் செய்ய வேண்டியதே. இந்தக் கோபாலாச்சாரி அன்று செய்த ஹாஸ்யங்களை எல்லாம், நான் பிறகு சாரங்கதர நாடகத்தை எழுதின பொழுது, ஒன்றும் விடாமல் எழுதியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். என் ஞாபக சக்தி மிகவும் நன்றாயிருந்த காலம் அது. நாடகம் முடிந்து நாங்கள் வீட்டிற்குத் திரும்பியபொழுது, ஜெயராம் நாயகர், நான் இந்த சாரங்கதர நாடகத்தை எழுத வேண்டும் என்றும், தான் சித்ராங்கியாக நடிக்க வேண்டும் என்றும் இச்சைப்படுவதாகத் தெரிவித்தார். எனக்கும் இக்கதையை, சில ஆபாசங்களை ஒழித்து, ஒழுங்காய் எழுதினால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது. உடனே மறுநாள் இக்கதையை, சில, ஆபாசங்களை ஒழித்து, ஒழுங்காய் எழுதினால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது. உடனே மறுநாள் இக்கதையை நாடகமாக எழுத ஆரம்பித்தேன். இதை அதி சீக்கிரத்தில் எழுதி முடிக்கும்படியாக எங்கள் சபையில் ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது; அதைப்பற்றிப் பிறகு எழுதுகிறேன். இப்பொழுது, சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் இந் நாடகத்தை நடிக்கும் விதத்திற்கும், நான் இதை நாடகமாக எழுதிய விதத்திற்கும் உள்ள பேதத்தை என் நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமெனத் தோன்றுகிறது. ஏனெனில் இந்நாடகத்தைப் பற்றி, என்து கற்றறிந்த நண்பர்களுட் சிலர் தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர்.