பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

நாடக மேடை நினைவுகள்


அதைப் போக்கவேண்டி நான் இதைச் சற்று விவரமாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். சாதாரணமாக நாடகக் கம்பெனிகள் இதை ஆடும்பொழுது, நரேந்திர பூபதிக்கு ரத்னாங்கி என்று ஒரு மனைவியிருப்பதாகவும், அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளையாகிய சாரங்கதரனுக்கு மணம் பேச வேண்டி, இதர தேசத்து ராஜகுமாரிகளின் படத்தை நரேந்திரன் வரவழைத்துப் பார்த்த பொழுது, சித்ராங்கியின் படத்தைக் கண்டு தானே மோஹித்து, அவளைத் தானே மணந்ததாவும், பிறகு சித்ராங்கி சாரங்கதரனைக் கண்டு, அவன் மீது இச்சைக் கொண்டு அவனைப் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அவன் சிற்றன்னையாயிற்றே என்று முறைக்க, அதன்பேரில் சித்ராங்கி, தன் கணவனிடம் சாரங்கதரன் தன் கற்பை அழித்ததாகப் பழி சுமத்தி அவனைக் கொல்லும்படி நரேந்திரன் உத்தரவு செய்யும்படியாகச் செய்ததாகவும், சாரங்கதரனுடைய கை கால்களை அரசன் ஆக்கினைப்படி கொலையாளிகள் வெட்டியதாகவும் நாடகத்தை நடத்துகின்றனர். புராணக்கதையும் இப்படியே. வடக்கேயுள்ள சாஜமஹேந்திரபுரத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ராஜாவாக நரேந்திரன் ஆண்டதாகவும் அவனுக்குச் சாரங்கதரன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் இக்கதையின்படி அவ்விடம் உண்மையில் நடந்தேறியதாகவும் சரித்திரமுண்டு. ஆகவே இது உண்மையில் நடந்த விருத்தாந்தமேயொழிய கட்டுக் கதையல்லவென்று அனு மானிப்பதற்கு ஆதாரங்கள் உண்டு. “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்று பட்டப் பெயர் பெற்ற காலஞ்சென்ற பல்லாரி கிருஷ்ணமாச்சார்லு அவர்களும் தெலுங்கில் இந் நாடகத்தை இப்படியே எழுதியிருக்கின்றனர். இந்நாடகமானது 1891இல் அவர்கள் சபையாகிய சரச வினோத சபை சென்னைக்கு வந்த பொழுது அவர்கள் ஆடிய நாடகங்களில் ஒன்றாகும். இங்ஙனம் இருந்தும் மேற்சொன்ன கதையின் போக்கு எனக்குத் திருப்திகரமாயில்லாமல், அதை மாற்றி எழுத வேண்டுமென்று தீர்மானித்தேன். முக்கியமாக சித்ராங்கி, நரேந்திர பூபதியை மணந்த பிறகு, தன் சக்களத்தி மகனாகிய சாரங்கதரன் மீது இச்சை கொண்டது தவறு என்று என் புத்தியிற்பட்டது. முக்கியமாக நான் எழுதும்படியான நாடகங்களெல்லாம் நமது குண ஸ்திரீகள் சங்கையின்றிப் படிக்கக் கூடியவைகளாயிருக்க வேண்டும் என்றும், அவைகள்