பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

171


ஒவ்வொன்றும், சன்மார்க்கத்தை நம்மவருக்குக் காட்ட வேண்டியவைகளாயுமிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்த எனக்கு, சித்ராங்கியின்மீது இப் பழி வராவண்ணம் நாடகத்தை மாற்றவேண்டியது அவசியமாயிற்று. இனி நான் எழுதிய நாடகத்தில் இதை எவ்வாறு மாற்றினேன் என்பதைத் தெரிவிக்கிறேன். எனது நாடகக் கதையில் சித்ராங்கிக்கும் நரேந்திரனுக்கும் விவாகமாகவில்லை. சித்ராங்கி கன்னிப் பருவமடைந்த பிறகு, நரேந்திரன் சாரங்கதரனுக்குப் பெண் பேசும்படி தூதர்களையனுப்ப, அவர்கள் மூலமாகச் சித்ராங்கி சாரங்கதரனுடைய படமொன்றைப் பெற்று, சாரங்கதரன் மீது காதல் கொண்டவளாய் அவனையே மணக்கத் தீர்மானித்து, நரேந்திரன் பட்டணம் வந்து சேர்கிறாள். நரேந்திரன் அவள்மீது மோஹங் கொண்டு அவளைத் தானே மணக்கத் தீர்மானிக்கிறான். அதற்காக சாரங்கதரனை மெல்ல வேட்டைக்கு அனுப்பிவிட்டு, சித்ராங்கியிடம் அணுகித் தன்னை மணக்கும் படி வேண்டுகிறான். இதை யறிந்த சித்ராங்கி, கோபம் கொண்டாளாயினும், அரசனை நேராக எதிர்க்கச் சக்தியற்றவளாய், ஏதோ தான் நோன்பு நோற்று வருவதாயும், அந் நோன்பு முடியும் வரையில் தான் ஒரு புருஷன் முகத்தையும் பார்க்கலாகாதென்றும் சொல்லி, அவனைத் தடுத்து விடுகிறாள். இச்சந்தர்ப்பத்தில் சாரங்கதரனுடைய புறா அகஸ்மாத்தாய்த் தன் மாளிகைக்கு வர, அதைப் பிடித்து வைத்துக்கொண்டு, சாரங்கதரனை நேரில் பார்க்கவேண்டி, அவன் வந்தாலொழிய அதைக் கொடேன் என்று சொல்லி அனுப்புகிறாள்.

நடந்த சூதெல்லாம் அறியாத சாரங்கதரன், மனத்தில் ஒரு களங்கமில்லாதவனாதலால், நேராகச் சித்ராங்கியிடம் சென்று புறாவைக் கேட்கிறான். அப்பொழுது சித்ராங்கி நரேந்திரன் செய்த சூதை அவனுக்குத் தெரிவித்து, தான் கன்னிகை யென்பதையும் சொல்லித் தன் காதலை வெளியிட்டுத்தன்னை மணக்கும்படியாக வேண்டுகிறாள். தன் தந்தை மணக்கா விட்டாலும், மணக்கும்படி இச்சை கொண்டாராதலால், தனக்குச் சித்ராங்கி சிற்றன்னையாகி விட்டதாகத் தெரிவித்து, சாரங்கதரன் மறுக்கிறான். சித்ராங்கி எவ்வளவு வேண்டியும் சாரங்கதரன் இசையாது அவள் அறையினின்றும் தப்பிச் செல்ல, சித்ராங்கி, தன் காதல் கை கூடாததால் மிகவும் சினம் கொண்டவளாய், அவளது தோழியாகிய மதனிகையின்