பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

நாடக மேடை நினைவுகள்


தூண்டுகோலினால், சாரங்கதரன் தன்னைப் பலாத்காரம் செய்ததாக நரேந்திரனிடம் முறையிடுகிறாள். அப்படி முறையிட்டதற்கும் முக்கியமான காரணம், அவளே பிறகு கூறுகிறபடி, எப்படியாவது நரேந்திரன் சித்ராங்கியைச் சாரங்கதரனுக்கு மணம் செய்விப்பான் என்று எண்ணியே. ஒரு பாபமுமறியாத சாரங்கதரன்மீது இவ்வாறு பழி சுமத்தியது தவறுதான்; இல்லையென்று சொல்வாரில்லை; இக் குற்றத்திற்காகச் சித்ராங்கி முடிவில் தன் உயிரைக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்கிறாள்; ஆயினும், ஒரு கன்னிகை, தான் காதல் கொண்ட புருஷனை மணக்க வேறு வகையறியாது, இப்படிப் பழி சுமத்தியாவது அவனை மணக்கப் பார்த்தது பெரும் தவறா? அல்லது நரேந்திரனை மணந்த ஒரு பெண் தன் சக்களத்தியின் குமாரனைக் கண்டு தன் கற்பின் கடமையையும் கருதாது, அவனைப் பலாத்காரம் செய்து, இணங்காமையால், அவன் மீது தன் கற்பைப் பழித்ததாகப் பழி சுமத்தியது பெருந்தவறா? என்று இதைப் படிக்கும் எனது நண்பர்களே தீர்மானிக்கலாம். அன்றியும் கதையின் உருக்கத்தை அதிகப்படுத்தும் பொருட்டு, சாரங்கதரனை, ஸ்திரீகளின் விஷயம் ஒன்றும் அறியாது விளையாட்டின் மீதே கவனமுள்ள பாலகனாக வர்ணித்துள்ளேன்; இந்த அறியாமையே ஒரு குற்றமாகும்; இக்குற்றத்திற்காக இவன் உயிரிழக்க வேண்டி வருகிறது. அச்சிடப்பட்டிருக்கும் இந்நாடகத்தைப் படிப்பவர்களெல்லாம் சித்ராங்கி ஓர் உயர்குணமுடைய ஸ்திரீயென்றும், அவள் புராணக்கதையிலுள்ளபடி அத்தனைக் கெட்ட நடத்தையுடையவள் அல்லவென்றும் ஒப்புக்கொள்வார்களென்றே நம்புகிறேன். இந்நாடகத்தை எங்கள் சபை நடிக்கும்பொழுது கண்டவர்களும் இந்நாடகத்தை அச்சில் படித்தவர்களும், இதில் கற்புடைய நமது தேசத்து ஸ்திரீகள் பார்க்கக்கூடாத அல்லது படிக்கக்கூடாத விஷயம் ஒன்றுமில்லை யென்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நாடகம் எங்கள் சபையோரால் பிறகு நடிக்கப்பட்டபொழுது ஒரு முறை நடந்த விருத்தாந்தத்தை இங்கெடுத்து எழுத அனுமதி கேட்டுக்கொள்கிறேன். இது முதன் முதல் பெங்களூரில் எங்கள் சபையோரால் நடிக்கப் பட்டது (அதற்குக் காரணம் முதலியவை யெல்லாம் பிறகு எழுதுகிறேன்); அப்புறம் பல தடவைகளில் சென்னையில் நடிக்கப்பட்டது. அவ்வாறு சென்னையில் ஒருமுறை