பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

173


நடிக்கப்பட்டபொழுது, காலஞ்சென்ற ஐகோர்ட்டு ஜட்ஜாயிருந்த கனம் சர் சதாசிவ ஐயர் அவர்கள், இதைப் பார்க்கத் தன் பத்தினியுடன் விக்டோரியா பப்ளிக்ஹாலிற்கு வந்திருந்தார். அம்முறை என் உயிர் நண்பனாகிய சி. ரங்கவடிவேலு சித்ராங்கியாகவும் நான் சாரங்கதரனாகவும் நடித்தோம். பத்மநாதராவும் சாரங்கதரனும் சம்பாஷிக்கும் காட்சிகள் வந்தபொழுது, சதாசிவ ஐயர் அவர்கள், தன் பக்கலில் ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்த என் பால்ய நண்பர்வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் “இதுதான் உங்கள் சபை நாடகங்களில் அதிக சிற்றின்பம் அடங்கிய நாடகம் போலும்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு ஸ்ரீனிவாச ஐயங்கார் “கொஞ்சம் பொறுங்கள். பிறகு தெரியும்” என்று பதில் உரைத்தனர். அக்காட்சிக்குப் பிறகு, சித்ராங்கி துயரப்படும் காட்சியும், ரத்னாங்கி தன் மகனைப் பிரியும் காட்சியும், சாரங்கதரன் தன் நண்பனைவிட்டுப் பிரியும் காட்சியும் ஒன்றன்பின் ஒன்றாக வர, அவற்றை யெல்லாம் பார்த்து, கண்களில் நீர் தாரை தாரையாக வடிய, நாடகத்தை மெச்சினர். மேற்சொன்ன விஷயங்களெல்லாம் எனது நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், மறுநாள் என்னிடம் நேராகக் கூறினார். பிறகு சதாசிவ ஐயரும் எனக்கு நேராகப் பரிச்சயமான பிறகு, இந்நாடகத்தைப் பற்றியும், நடிக்கும் முறையைப் பற்றியும் என்னை சிலாகித்துக் கூறியிருக்கின்றனர். அன்றியும் காலஞ்சென்ற, ஐகோர்ட் ஜட்ஜாயிருந்து, பிறகு எக்சிக்யுடிவ் கவுன்சில் மெம்பராயிருந்த, எங்கள் சபையிலும் பிரசிடென்ட் (President) ஆகயிருந்த, வி.கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், இந்நாடகத்தை மெச்சியிருக்கின்றனர். குற்றமற்ற மனமுடைய, நற்குணத்தையுடைய இவர்கள் ஆமோதிப்பைவிட எவரும் வேறு நற்சாட்சிப்பத்திரம் விரும்பார்கள் என்பது திண்ணம். இந்நாடகம் எழுதியதில் மாத்திரமன்று, நான் எழுதும் எல்லா நாடகங்களிலும், நமது சொந்தத் தாய்மார்களும், சகோதரிகளும், குழந்தைகளும் படிக்கக்கூடாத விஷயம் ஒன்றையும் எழுதலாகாது என்று நான் கங்கணம் பூண்டு இந்த நாற்பது வருடங்களாக எழுதி வருகிறேன். என் நாடகங்களைப் படித்த ஒரு பெண்மணியும் அவைகளில் தவறான ஒரு வார்த்தையும் இருப்பதாக இதுவரையில் குறை கூறினதில்லை. இதுவே எனக்கு ஒரு பெருங்கீர்த்தியாகக் கொண்டு சந்தோஷப்படுகிறேன். ஆயினும்