பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

நாடக மேடை நினைவுகள்


இந்நாடகத்தில் ஒரு குற்றமிருப்பதாக, ஒரு பத்திராதிபர் மாத்திரம் எழுதியுள்ளார். அதையும் மறைக்காது இங்கு எழுதுகிறேன்.

பல வருடங்களுக்கு முன் ஒரு முறை இந்நாடகம் எங்கள் சபையோரால் நடிக்கப்பட்ட பொழுது, அதைப் பார்த்த ‘சசிரேகா’ என்னும் ஆந்திரப் பத்திரிகையின் பத்திராதிபராயிருந்த சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டது தவறு; அதற்குச் சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார். என் நாடகங்களைப் பற்றி அச்சில் வரும் அபிப்பிராயங்களையெல்லாம் ஒரு புஸ்தகத்தில் ஒட்டி வைப்பது வழக்கம்; அதன்படியே இதையும் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆகவே என்ன சந்தர்ப்பத்தில், என்ன காரணம் பற்றி, நான் எழுதிய நாடகத்தில் சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிடும்படி நேரிட்டது, அதற்குச்சாரங்கதரன் இணங்கும்படி நேரிட்டது என்பதை அறியார்போலும் நான் அச்சிடப்பட்டிருக்கும் இந்நாடகத்தை, இதைப் படிப்பவர்கள் படித்துப் பார்ப்பார்களாயின், இதில் அவர் கூறியபடி தவறொன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள்.

இந்தச் சாரங்கதர நாடகமானது எங்கள் சபையோரால் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. காலஞ்சென்ற என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு மடிந்தபின் நாங்கள் இதை ஆடுவதை விட்டிருக்கின்றோம். என்னிடமிருக்கும் குறிப்பின் படி இந்நாடகமானது என் அனுமதியின் பேரில் இதுவரையில் 198 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்நாடகத்தை எங்கள் சபையோர் ஆடும் பொழுதெல்லாம் அதிகப் பணம் வசூலாயிருக்கிறது. எங்கள் சபைக்குப் பெருமையைக் கொண்டுவந்த நாடகங்களுள் இதுவும் ஒன்றே என்று நான் கூறவேண்டும்.

இந்நாடகத்தில் இதன் பூர்வகதையில் இல்லாது நான் புதிதாய் எழுதிய நாடகப் பாத்திரம் மதுரகவி என்பது ஒன்றே. இப்பாத்திரத்தை நான் ஹாஸ்ய பாகத்திற்காக இந்நாடகத்தில் சேர்த்தேன். இது முக்கியமாக என் பழைய நண்பராகிய, நான் முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிற, ச. ராஜகணபதி முதலியாருக்காக எழுதப்பட்டது. இந்த மதுரகவிக் கவிராயர் பேசும்பொழுதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை தன் தகப்பனாரை “எங்கள் தகப்பனார் கூறியிருக்கிறார்” என்று இழுத்துக் கொண்டிருப்பார். இது