பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

175


அரங்கத்தின்மீது சொல்லப்படும் பொழுதெல்லாம் அதிக நகைப்பை விளைத்திருக்கிறது. இதை நான் இவ்வாறு எழுதியதற்கு வேடிக்கையான காரணமுண்டு. என் அருமைத் தந்தையார் இறந்தபின், கொஞ்ச காலம்வரையில், நான் அடிக்கடி சந்தர்ப்பம் நேரிடும் பொழுதெல்லாம், என் தந்தையார் புகட்டிய புத்திமதிகளை யெல்லாம் என் நண்பர்களுக்குச் சொல்வது வழக்கமாயிருந்தது. நான் அடிக்கடி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் பொழுது, நானே ஒரு முறை இதைப்பற்றி யோசித்துப் பார்த்தேன். என் தந்தை எனக்கு அருமையாயிருக்கலாம்; நான் அடிக்கடி அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்களுக்கு, “என்னடா இது! இவன் எப்பொழுதும் தன் தந்தையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறான்!” என்று ஏளனமாகத் தோன்றாதா? என்று என் புத்தியிற்பட்டது. இது மற்றவர்களுக்கு நகைப்பை விளைக்குமென்று கண்டு, இதை அடிக்கடி கூறிக்கொண்டி ருக்கும் “மதுரகவி” என்னும் பாத்திரத்தை சிருஷ்டித்தேன். இப்பொழுதும் இப்பாத்திரத்தை யாராவது மேடையின் மீது ஆடினால், எங்கள் சபையில் அவரைப் பிறகு, “உங்கள் தகப்பனார் இதைப்பற்றி என்ன சொல்லுகிறார்?” என்று ஏளனம் செய்வது வழக்கம்.

நாங்கள் இந்நாடகத்தை முதல் முதல் ஆடியபொழுது நான் மேலே குறித்தபடி, ராஜகணபதி முதலியார் மதுரகவியாக நடித்தார்; வெங்கடகிருஷ்ண பிள்ளை, நரேந்திரனாக வந்தார்; சித்ராங்கி பாத்திரத்தை ஜெயராம் நாயகர் பூண்டனர். அ. கிருஷ்ணசாமி ஐயர், சாரங்கதரன் தாயாராகிய ரத்னாங்கி வேடம் பூண்டனர்; தற்காலம் திருநெல்வேலியில் அட்வகேட்டாக இருக்கும் சாது கணபதி பந்துலு பி.ஏ.பி.எல். மதனிகையாகத் தோன்றினார்; எம். துரைசாமி ஐயங்கார் வழக்கப்படி, விதூஷகனாக ஆக்டு செய்தார்; சுமந்திரன் எனும் சாரங்கதரன் தோழனது பாத்திரம், என் பழைய நண்பராகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்காருக்காக எழுதப்பட்டபடியால், அதை அவருக்குக் கொடுத்தேன். எனது நண்பர் சி. ரங்கவடிவேலு அச்சமயம் பி. ஏ. பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்த படியால், அவருக்கு ஒரு பாகமும் கொடுக்கவில்லை.

இந்நாடகமானது சென்னையில் ஆடப்படாமுன் முதல் முதல் பெங்களூரில் எங்கள் சபையாரால் ஆடப்பட்டதற்குக்