பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

நாடக மேடை நினைவுகள்


காரணம், சற்று சவிஸ்தாரமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நானும் எனது நண்பர்களும் ஒருங்குகூடிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, பல்லாரியிலிருந்து சென்னைப் பட்டணத்திற்கு சரச வினோத சபையார் அடிக்கடி வருகிறார்களே, அம்மாதிரி நாமும் வெளியூருக்கு ஏன் போகக்கூடாது என்கிற பேச்சு வந்தது. அப்பொழுது அருகில் நின்று கொண்டிருந்த “அப்பு” என்பவன், “ஆமாங்கள், பெங்களூருக்குப் போனால் நன்றாயிருக்கும்” என்று சொன்னான். அதற்குக் காரணம் அவன் தன் பழைய எஜமானனான காலஞ்சென்ற சுப்பராயாச்சாரியுடன் பலதரம் அங்கு போய் வந்ததே. அதன்மீது நாங்கள் எல்லோரும் பெங்களூருக்கு, டிசம்பர் விடுமுறை, அதாவது கிறிஸ்ட்மஸ் லீவில் (Xmas Leave) போகலாம் என்று தீர்மானித்தோம். பிறகு, சபையார் வெளியூருக்குப் போய் நாடகமாடுவதென்பது நூதனமாகையால், சபையின் பொதுக்கூட்டத்தில் இதற்காக உத்தரவு பெற வேண்டுமென்று ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. சபையின் பொதுக்கூட்டத்தார் இதற்கு ஓர் ஆட்சேபணையும் செய்ய மாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். இக்கூட்டம் கூடுவதற்கு நியமித்த தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் இரவு என் நண்பர்களாகிய வெங்கிடகிருஷ்ண நாயுடும், வெங்கிட கிருஷ்ணப் பிள்ளையும் என்னிடம் வந்து ரகசியமாக, சபை பெங்களூருக்குப் போவதற்குப் பொதுக் கூட்டத்தில் ஆட்சேபணை வரும்போலிருக்கிறது என்று தெரிவித்தார்கள். அப்படி ஒன்றுமே ஆட்சேபணையிராது என்று எண்ணியிருந்த நான் இதைக் கேட்டவுடன் ஆச்சரியம் கொண்டவனாய், “யார் ஆட்சேபிக்கப் போகிறது?” என்று வினவினேன். அதன் பேரில் நூதனமாய் நமது சபையில் தெலுங்கு நாடகப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதே, அதைச் சார்ந்தவர்கள்தான் இதற்குக் காரணமாயிருக்கிறார்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். அதன் மீது எனக்கு அதிகக் கோபம் பிறந்தது. தமிழில் மாத்திரம் அங்கு நாடகங்கள் போட உத்தேசித்திருக்கிறபடியால் இவர்கள் தாங்கள் போவதற்கில்லையே யென்று ஆட்சேபிக்கிறார்கள் என்று எண்ணினவனாய், எப்படியாவது அவர்கள் எண்ணத்தைத் தடுத்துப் பெங்களூருக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று தீர்மானித்தேன். நூதனமாய்