பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

177


சபையில் ஸ்தாபிக்கப்பட்ட தெலுங்குப் பிரிவின் ஆக்டர்கள், வெளியூருக்கே சபையார் போகக்கூடாது என்கிற கோட்பாட்டின் மீது ஆட்சேபித்தார்களோ, அல்லது தாங்கள் அங்கு போவதற்கில்லையே என்று ஆட்சேபித்தார்களோ அது ஈசனுக்குத்தான் ஸ்திரமாய்த் தெரியும்.

ஆயினும் இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் கழித்து மறுபடியும் பெங்களூருக்குச் சபை போகவேண்டுமென்றும், அச்சமயம் தமிழிலும் தெலுங்கிலும் அங்கு நாடகங்கள் நடத்தவேண்டுமென்றும் தீர்மானித்தபொழுது, இவர்களெல்லாம் ஓர் ஆட்சேபணையும் செய்யாது, குதூஹலத்துடன் உடன்பட்டபடியால், என் புத்தியிற்பட்ட காரணம் அவ்வளவாகக் தவறானதல்ல என்று நினைக்க வேண்டியவனாயிருக்கிறேன்.

அக்காலம் எனக்கு இருபத்திரண்டாம் வயது. அப்பொழுது நான் மிகவும் பிடிவாதக்காரனாயிருந்தேன் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. “கொடியும் பேதையும் கொண்டதுவிடா” என்று ஆன்றோர் கூறியுள்ளபடி ஏதேனும் ஒன்றைத் தீர்மானித்தால், தப்போ ஒப்போ, அதைச் சாதித்துத்தான் வேறு வேலை பார்க்க வேண்டும் என்னும் பிடிவாத குணமுடையவனாயிருந்தேன். இப்பொழுதும் அப்பிடிவாதக் குணம் போகவில்லை யென்று எனது நண்பருட் சிலர் கூறுகின்றனர். ஆயினும் அவ்வயதில் இருந்த பிடிவாதத்திற்கும், இப்பொழுதிருப்பதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசமுண்டென நினைக்கிறேன். அக்காலத்தில் நான் ஏதாவது ஒன்றைத் தீர்மானித்தால், பிறகு அது தவறு என்று எனக்கே தோன்றிய போதிலும், தவறென்பதை ஒப்புக் கொண்டு அதை விட்டுவிட வேண்டும் என்னும் புத்தியில்லாதவனாயிருந்தேன்; இப்பொழுது எவ்வளவுதான் உறுதியாக ஒன்றைத் தீர்மானித்தபோதிலும், அது தவறு என்று என் புத்தியிற் பிறகு பட்டால், அதை விட்டுவிடவேண்டும் என்னும் புத்தி ஒரு சிறிது உடையவனாயிருக்கிறேன், என்று எண்ணுகிறேன்.

இனி அப் பொதுக்கூட்டத்தில் நடந்த வியவஹாரத்தை எழுதுகிறேன்.