பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

நாடக மேடை நினைவுகள்


பொதுக் கூட்டத்திற்குமுன் எனக்கிருந்த மூன்று நான்கு நாட்களுக்குள் எப்படியாவது பெங்களூருக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்ததற்காக, எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்டேன். தற்காலம் முனிசிபாலிடி எலக்ஷனுக்காகவும், சட்ட நிரூபண சபை எலக்ஷனுக்காகவும் ஓட் சம்பாதிப்பதற்காக எப்படி வீடு வீடாய்ப் போய்ப் பிரயத்தனப்படுகிறார்களோ, அவ்வாறு சபையின் அங்கத்தினர் வீடுகளுக்கெல்லாம் போய் ஒவ்வொருவருடைய அபிப்பிராயத்தையும் அறிந்து, அவர்களை யெல்லாம் என்பட்சம் திரும்பும்படியாக முயன்றேன். இம்முயற்சியில் என் நண்பர்களாகிய வெங்கடகிருஷ்ண நாயுடும், வெங்கடகிருஷ்ண பிள்ளையும் எனக்கு மிகவும் உதவியாயிருந்தனர். அப்பொழுது எங்கள் சபையில் 63 அங்கத்தினர் இருந்தனர். இது எனக்கு எப்படி ஞாபமிருக்கிற தென்றால், அவ்வருஷம் மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவத்தின் பொழுது நான் சபையின் அங்கத்தினர்க்கெல்லாம், மயிலாப்பூரில் ஒரு சிற்றுண்டிப் பார்ட்டி கொடுத்தேன். அச்சமயம், இன்று அறுபத்து மூவர் உற்சவம், நமது சபையிலும் இன்று அறுபத்து மூவர் இருக்கிறோம் என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். பெங்களூருக்கு நாங்கள் போகவேண்டும் என்று முயன்ற படியே, போகக்கூடாது என்று எதிர்க்கட்சிக்காரர்களும் முயற்சி செய்தார்கள். அக்கட்சியில் பெரும்பாலும் நூதனமாக ஸ்தாபிக்கப்பட்ட தெலுங்குப்பிரிவின் அங்கத்தினராயிருந்த போதிலும், அவர்கள் எங்கள் சபையின் காரியதரிசியாகிய ஊ. முத்துக்குமாரசாமி செட்டியாரையும், கண்டக்டராகிய வி. திருமலைப்பிள்ளை அவர்களையும் கட்டிக்கொண்டார்கள். இதை மெல்ல அறிந்த நான் என் பிரயத்தனத்தைப் பதின்மடங்கு அதிகமாகச் செய்ய ஆரம்பித்தேன். இதில் எனக்கு நேரிட்ட முக்கியமான கஷ்டம் என்னவென்றால், இதைத் தீர்மானிக்க எங்கள் சபை பொதுக்கூட்டம் நாளைக்குக் கூடுவதாயிருக்க, இன்று, அதுவரையில் எங்கள் பட்சமிருந்து, பெங்களூருக்குப் போக வேண்டுமென்று மிகவும் உற்சாகத்துடனிருந்த ஜெயராம் நாயகர், அவருடைய மைத்துனராகிய வி. திருமலைப்பிள்ளைக்கிணங்கி எதிர்க்கட்சியில் சேரப்போகிறதாகக் கேள்விப்பட்டதே! அதன் மீது அன்று சாயங்காலம் அவர்