பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

179


வீட்டிற்குப் போய் என் நியாயங்களையெல்லாம் எடுத்துக் கூறி, எங்கள்பட்சம் ஓட் கொடுக்காவிட்டாலும் எதிர் பட்சம் ஓட் கொடாதே என்று வற்புறுத்தி, அவர் இரண்டு பக்கத்திலும் சேராது, (நியூட்ரல்) பொதுவாக இருக்கும்படி வாக்கு வாங்கிக் கொண்டேன். எதிர்க்கட்சிக்காரர்களும் தங்களாலியன்ற அளவு சூழ்ச்சி செய்து பார்த்தார்கள் என்றே நான் கூறவேண்டும். அதற்கு ஓர் உதாரணமாக இது நடந்து 35 வருஷம் பொறுத்து போன மாதம் எங்கள் சபையின் பழைய அங்கத்தினராகிய நம் பெருமாள் செட்டியார் என்பவர் எனக்குக் கூறியதை இங்கு வரைகிறேன். ஏதோ சபையைப்பற்றிப் பேச்சு வந்த பொழுது அந்தச்சமயம் தெலுங்கு ஆக்டர்களெல்லாம் தன்னிடம் வந்து, “நீ தெலுங்கு மனிதனாயிருக்கிறாய். ஆகவே நீ தமிழ்க் கட்சியில் சேரலாகாது. எங்கள் பக்கம்தான் உன்னுடைய ஓட் கொடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினதாயும், அதற்கு அவர் இசையாது தனக்கு நியாயம் என்று தோன்றிய என்பட்சமேதான் ஓட் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு மும்முரமாக இருதிறத்தாரும் தங்கள் பட்சம் ஓட் கொடுக்கும்படியாக எல்லாவிதப் பிரயத்தனங்களும் முடிந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை ஜெயராம் நாயகருடைய வீட்டில் எங்கள் சபையின் பொதுக்கூட்டம் கூடப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில், திருமலைப்பிள்ளையின் சிநேகிதரும் அட்டர்னி தொழிலில் பாகஸ்தருமாகிய சி. ரங்கநாதம் நாயுடு என்பவர் அக்கிராசனம் வகித்தார். ஏதோ ஒரு காரணத்தினால் என்பட்சம் சேர்ந்த எனது நண்பர்கள், நான் அந்தக் கூட்டத்தில் வாய் திறந்து பேசக்கூடாது என்று கட்டுப்பாடு செய்து விட்டனர்! அவ்வாறு வாக்குக் கொடுத்த நான் வாயைத் திறக்க அசக்தனானேன்! அவர்கள் அவ்வாறு என் வாயைக் கட்டிவிட்டது, இவன் அடங்காப்பிடாரி, வாயைத் திறக்க விட்டால் ஏதாவது அதனப் பிரசங்கித்தனமாய்ப் பேசி விடுவான், அதனால் குழப்பமுண்டாகும். ஆகவே இவனைப் பேசவிடலாகாது என்று தீர்மானித்து இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்று நான் ஊகிக்கிறேன். அப்பொழுது அவ்வாறு கட்டுப்பட்டது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்த போதிலும், அப்பொழுது எனக்கிருந்த குணத்தையும், மற்ற சந்தர்ப்பங்களையும் நோக்குமிடத்து, அவர்கள் செய்தது சரியென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. நான்