பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

நாடக மேடை நினைவுகள்


பேசாவிட்டாலும் என் பக்கம் சிலரைப் பேசும்படிச் செய்தேன். எதிர்க்கட்சியில் முக்கியமாக வி. திருமலைப்பிள்ளை அவர்கள் பெங்களூருக்குச் சபை போகக்கூடாது என்று பேசினார். இன்னும் சிலரும் ஆட்சேபித்தனர். அப்படி ஆட்சேபித்தவர்களெல்லாம், ஏதோ தமிழ்ப் பிரிவின் மீதுள்ள பொறாமையினால் அவ்வாறு செய்தனர், என்று நான் எண்ணுவதற் கிடமில்லை. எங்கள் தரப்பில் பெங்களூருக்குப் போவதில் தவறில்லை; அதனால் சபைக்கு நலமுண்டாகும் என்று நாங்கள் எண்ணியபடியே, அவர்கள் தரப்பிலும் சிலர், வாஸ்தவத்தில் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடகங்களாடுவது உசிதமன்று, சபைக்கு அழகன்று, அதனால் சபையின் பெயர் கெடும் என்ற எண்ணியிருக்கலாம். அவ்வாறே சிலராவது எண்ணியிருந்தனர் என்று நான் உறுதியாய்க் கூறவேண்டியவனாயிருக்கிறேன். இருதிறத்தாரும் பேசி முடிந்தவுடன், ஓட் எடுக்கப்பட்டது. மொத்தம் வந்திருந்த அங்கத்தினர் 55; ஓட் எடுத்தபொழுது இருபத்தைந்து பெயர் போகலாம் என்றும், இருபத்து நான்கு பெயர் போகக்கூடாதென்றும் ஓட் கொடுத்தார்கள். மிகுந்தவர்கள் பொதுவாக (Neutral) இருந்தார்கள். எதிர்க்கட்சிக்காரர் உடனே மறுபடியும் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று போல் (Poll) கேட்டார்கள். மறுபடியும் எண்ணிப்பார்த்த பொழுது இருபத்தாறு பெயர் போகலாமென்றும், இருபத்தைந்து பெயர் போகக் கூடாதென்றும் தெரிவித்தனர். அதன் பேரில் இன்னொரு முறை கணக்கிட்டுப் பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். இம்முறை ஓட் எடுத்த பொழுது இருபத்தேழு பெயர் போவதற்காகவும், இருபத்தாறு பெயர் போகக்கூடாதென்றும் ஓட் கொடுத்தார்கள்! இவ்வாறு மூன்று முறை ஓட் எடுத்த பொழுதெல்லாம், நான் ஜெயராம் நாயகர் முகத்தை விட்டு என் கண்களை எடுக்கவில்லை; அவரைத் தங்கள் பக்கம் சேரும்படியாக அநேகர் வற்புறுத்திப் பார்த்தார்கள். ஜெயராம் நாயகர், அவர்கள் வற்புறுத்துதலுக் கெல்லாம் இணங்காமல் தன் வாக்கின்படி பொதுவாகவே இருந்து விட்டார். அவர் அன்று மாறியிருப்பாராயின், நாங்கள் பெங்களூருக்குப் போவது நின்று போயிருக்கும். ஏனெனில், இருபக்கமும் ஓட்டுகள் சமமாக இருந்தால், அக்கிராசனம் வகித்த சி. ரங்கநாதம் நாயுடு, போகக்கூடாது என்று தன் தீர்மானிக்கும் ஓட்டை (Casting Vote) கொடுத்திருப்பார் என்பதற்கு