பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

181


ஐயமில்லை . கடைசியாகத் தீர்மானமானவுடன் நடந்த வரலாற்றை எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், அதனால் நான் ஒரு பெரும் சபையார் போகக்கூடாது என்று மிகவும் ஆட்சேபணை செய்துவந்த வி. திருமலைப்பிள்ளை அவர்கள், உடனே என்னிடம் வந்து, என் முதுகைத் தட்டிக்கொடுத்து, “சம்பந்தம்! போவதென்று இப்பொழுது தீர்மானமாகி விட்டபடியால், நானும் உங்களோடு பெங்களூருக்குப் போகிறேன். எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்; சபையின் பெயர் கெடாதபடி பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தை விட்டுச் சென்றார். என் எண்ணத்தின்படி முடித்து நான் அன்று ஜெயித்தபோதிலும், திருமலைப்பிள்ளை அவர்கள் தன் நடவடிக்கையால் என்னை அன்று ஜெயித்தார் என்றே கூறவேண்டும். அன்று முதல் அவரை இந்தப் புத்திமதியை எனக்குப் புகட்டிய ஆசானாகக்கொண்டு நடந்து வருகிறேன். எங்கள் சபையின் கூட்டங்களிலாவது, அல்லது இதர கூட்டங்களிலாவது நான் மேற்கொண்ட கட்சி ஜெயம்பெறாது, எதிர்க்கட்சி ஜெயிக்கும் போதெல்லாம், திருமலைப்பிள்ளை அவர்கள் நடந்து கொண்டதையே என் பற்றுக்கோடாகக் கொண்டு நடக்க என்னாலியன்றவளவு முயன்று வருகிறேன். நம்முடைய பக்கம் ஜெயிக்காவிட்டால், எதிர்ப் பக்கம் ஜெயித்ததே என்று பொறாமை கொண்டு, அதற்கு அப்பக்கத்திற்கு எவ்வளவு இன்னல் விளைக்கக்கூடுமோ அவ்வளவு உண்டாக்குவதுதான் இவ்வுலகில் சகஜமாயிருக்கிறது. அதைத் தவிர்த்து, தாங்கள் எண்ணிய எண்ணமே சரியென்று தங்கள் புத்திக்குட்பட்ட போதிலும், எதிர்ப்புறம் ஜெயித்தபின் அவர்கள் பக்கமும் நியாயமாயிருக்கலாம். இனி உழைத்துப் பொது நலத்தைக் கோரவேண்டுமே என்னும் புத்திமான்கள் இவ்வுலகில் சிலரே; அவ்வாறு நடந்து வந்த சிலருள் காலஞ்சென்ற என் நேர் சகோதரனான ஆறுமுக முதலியார் ஒருவர் என்று நான் இங்குக் கூறவேண்டும். இதைக் கூறுவதில், ஏதோ சகோதர வாஞ்சையினால், இவன் கூறுகிறான் என்று எனது நண்பர்கள் எண்ணாதிருப்பார்களாக. காலஞ்சென்ற ஆறுமுக முதலியாரை நேரில் நன்றாய் அறிந்தவர்கள் நான் கூறியது உண்மையென ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அநேக சங்கங்களிலும், வியவஹாரங்களிலும்