பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

நாடக மேடை நினைவுகள்


மேற்சொன்ன விஷயத்தை ஆராய்ந்தறிந்து, எனது கற்றறிந்த சகோதர சகோதரிகள், அதன்படி நடந்து வருவார்களாயின் அவர்களுக்கும் நன்மை யுண்டாம், நமது நாட்டிற்கும் பெரும்பாலும் நன்மை யுண்டாம் என்று நான் உறுதியாய் நம்புகிறேன்; இதை அறிவது மாத்திரம் போதாது, அறிந்ததை அப்யசிக்கவும் வேண்டும்; நாம் ஓர் உண்மையை அறிந்ததன் பலன் அதை அப்யாசத்திற்குக் கொண்டு வருவதேயாம்.

மேற்சொன்னவாறு எங்கள் சபையோரால் பெங்களூருக்குப் போவதென்று தீர்மானிக்கப்பட்டவுடன், நாட்கள் அதிகமாயில்லாதபடியால், இரவு பகலாக எழுதி சாரங்கதர நாடகத்தை முடிக்க வேண்டியவனாயினேன். அதில் பாத்திரங்களை எடுத்துக்கொண்ட எனது நண்பர்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொள்வதற்குத்தான் அவகாசமிருந்தது. ஒரு ஒத்திகையும் சென்னையில் நடத்துவதற்குக் காலமில்லாமற் போயிற்று.

இதுதான் எங்கள் சபை முதல் முதல் வெளியூருக்குப் போய் நாடகங்கள் ஆடின சந்தர்ப்பமாகையால், இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.

ஒரு நாடகமாடுவது ஒரு கலியாணம் செய்து முடிப்பது போல் கஷ்டமான காரியமென்று, முன்பே எழுதியிருக்கிறேன்; அப்படியிருக்குமாயின், இது வெளியூருக்குப் போய் ஒரு கலியாணத்தைச் செய்து வைக்கும் கஷ்டத்திற்குச் சமானமாகும்! டிசம்பர் விடுமுறையில் நாங்கள் போனோம். போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, எங்களில் ஒருவராகிய வெங்கடகிருஷ்ண நாயுடுவை முன்பாக அனுப்பி எங்களுக்கு விடுதி முதலியவைகளை யெல்லாம் ஏற்பாடு செய்யும்படி செய்தோம். அவர் முன்னதாகப் போய் எங்களுக்காக வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செம்மையாகச் செய்து வைத்தார். நாங்கள் நாடகமாடுவதற்காக, கப்பன்ரூம்ஸ் (Cubbon Rooms) என்னும் சிறிய நாடக சாலைதான் கிடைத்தது. அக்காலம், அதில்தான் பெங்களூரிலுள்ள ஐரோப்பியர்கள் நாடகமாடுவது வழக்கமாயிருந்தது. தற்காலம், போனவருஷம் அங்கு நான் போயிருந்தபொழுது அதைப்பற்றி விசாரித்துப் பார்த்தேன். பெங்களூரில் மற்ற இடங்களில் பெரும் நாடக சாலைகள் பல கட்டப்பட்டபடியால் கப்பன் ரூம்சில் நாடகமாடுவது அற்றுப் போய் விட்டது என்று சொன்னார்கள்.