பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

நாடக மேடை நினைவுகள்


சாரங்கதரா நாடகத்தில் ஆக்டர்களெல்லாம் இன்னும் ஒன்றும் படிக்கவேயில்லையாமே?” என்று கேட்டார். எதிர்க் கட்சியில் சார்ந்த சிலர், இதை அவருக்குத் தெரிவித்தார்கள் போலும். அவர்கள் என்ன எண்ணத்துடன் தெரிவித்தார்களோ நான் சொல்வதற்கில்லை; அப்படிச் செய்தது எங்களுக்கு (முக்கியமாக எனக்கு) மிகவும் நன்மையாய் முடிந்தது. “அதெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று அவருக்குப் பதில் சொல்லி விட்டு என் வார்த்தையையும் சபையின் மானத்தை யும் காப்பாற்றும் பொருட்டு, மெல்ல அவருக்குத் தெரியாமல் ஒவ்வொரு ஆக்டராக அழைத்து, எங்கள் வண்டியில் காலியாயிருந்த கடைசி கம்பார்ட்மெண்டில் அவரவர்களுடைய பாகத்தை நடித்துக் காட்டி எப்படியாவது நமது பெயரைக் காப்பாற்ற வேண்டும், உங்கள் பாகங்களைக் குருட்டுப்பாடம் செய்து விடுங்கள் என்று அவர்களை வேண்டிக் கொண்டேன். அவர்களும் என் வேண்டுகோளுக்கிணங்கி, ரெயில் பிரயாணம் செய்யும் பொழுது, தங்கள் பாடங்களைச் சுறுசுறுப்புடன் படித்து வந்தனர்.

நாங்கள் போய் பெங்களூர் சேர்வதற்குள் இருட்டி விட்டது. முன்பே அங்கு போயிருந்த வெங்கடகிருஷ்ண நாயுடு எங்களுக்கெல்லாம் கோச் வண்டிகள் ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏறிக்கொண்டு எங்களுக்கு ஏற்படுத்திய விடுதிக்குப் போகுமுன் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு குறிக்க வேண்டிய வனாயிருக்கிறேன். ரெயில் ஸ்டேஷனுக்கு எங்களை வரவேற்க வந்தவர்களுள், எனது நண்பராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காருடைய பந்து ஒருவர் வந்திருந்தார். ரங்கசாமி ஐயங்காருக்காகப் பால் கொண்டு வந்து கொடுத்தார். ரங்கசாமி ஐயங்கார் தான் சாப்பிட்டுவிட்டு, என்னையும் கொஞ்சம் சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார். அவர் வெண்டு கோளுக்கிணங்கி பெங்களூரில் டிசம்பர் மாசத்துக் குளிர்ச்சியால் பனிக்கட்டியைப் போல் சில்லென்றிருந்த அப் பாலை அருந்தினேன்.

இதென்ன, இந்த அல்ப விஷயத்தை இவன் இங்கு எடுத்துரைப்பானேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நினைக்கலாகாது. இதனாலும், இன்னும் இனி நான் கூறப்போகிற சில சிறு காரணங்களாலும், முடிவில் நான் என்ன