பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

185


கஷ்டத்திற்கு ஆளானேன் என்பதை இனி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்கள்.

எங்கள் விடுதிக்குப் போகும்பொழுது, பெங்களூரின் குளிர்ந்த காற்றையும் கவனியாது, எங்கள் வண்டிகளின் ஜன்னல்களை யெல்லாம் திறந்து கொண்டு போனோம். போனவுடன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டோம். நான் படுத்துக் கொண்ட இடம், எங்கள் பகுதியில், ஒரு கூடம். நான் படுத்துக் கொண்ட இடத்துக்கு நேராகக் காற்று வருவதற்காக ஒரு ஜன்னல் இருந்தது. அதை மூடுவதற்கு ஏதோ காரணத்தினால் சாத்தியமில்லாமலிருந்தது. பின்வருவதை அறியாதவனாய், இதனால் என்ன கெட்டுப் போகின்றது என்று அதைக் கவனியாதவனாய் அந்த ஜன்னலுக்கு நேராக நான் படுத்துறங்கி விட்டேன். மறுநாட் காலை நான் எழுந்தவுடன் வாயைத் திறந்து பேச முயன்றால், என் குரல், எனக்கே கேட்காதபடி தொண்டை ஒரேமுட்டாய்க் கட்டிக் கொண்டது! குளிர்ந்த பாலைச்சாப்பிட்டது ஒரு பக்கம், வண்டியில் வரும்பொழுது குளிர்ந்த காற்றில் பட்டது ஒரு பக்கம், இரவில் மூடப்படாத ஜன்னலுக்கெதிராகப் படுத்துக் கொண்டது ஒரு பக்கம், எல்லாம் சேர்ந்து, என் தொண்டை ஒன்றும் பேசமுடியாமற்படி கட்டிக் கொண்டது. பாடுவதற்கு ஏதாவது கஷ்டமாயிருந்தால் சில பாகவதர்கள், தொண்டை கம்மலாயிருக்கிறது என்று கூறுவதுண்டு. “ஸ்திரீகள் காதில் அணிவது, எனக்குத் தொண்டையிலிருக்கிறது” என்று வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட கம்மல், மிகவும் பெரிதாய், என் தொண்டையைப் பிடித்து விட்டது; எனக்கு இன்னது சொல்வதென்று தோன்றவில்லை. “அழ முடியாத துக்கம்” என்று அதற்கு முன் கேள்விப்பட்டிருக் கிறேன். அப்பொழுதுதான் அது இத்தன்மையது என்று நேரில் சுய அனுபவத்தில் அறிந்தேன். அன்றைத் தினம் நாங்கள் ஆட வேண்டிய நாடகம் “மனோஹரன்.” வேறு எந்த நாடகமாவது இருந்தாலும் கொஞ்சம் பெரிதல்ல. இந்த மனோஹரன் நாடகத்தில் முன்பே இதை வாசிக்கும் எனது நண்பர்பளுக்கு நான் அறிவித்திருக்கிறபடி, நான் நன்றாய் நடிப்பதற்கு என் தொண்டையானது மிகவும் வன்மையுடையாதாயிருக்க வேண்டியது அதி அவசியம். அப்படிப்பட்ட தருவாயில் என் குரலை நானே கேட்பது கஷ்டமாயிருந்தால், என் மன