பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

நாடக மேடை நினைவுகள்


நிலைமை எப்படி இருந்திருக்க வேண்டுமென்று எனது நண்பர்களே ஊகித்துக் கொள்ளலாம். மெல்ல எழுந்திருந்து பக்கத்து அறையில் இருந்த வெங்கிடகிருஷ்ணப் பிள்ளையிடம் என் ஸ்திதியை, பாதி என் மெல்லிய குரலாலும் பாதி கை ஜாடையாலும் தெரிவித்தேன்! அவர் இதற்காக ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை; காலையில், குளிர் தேசமாகையால் அப்படித்தானிருக்கும்; வெயில் ஏற ஏறச் சரியாப் போய்விடுமென்று தெரிவித்தார்; வைத்தியம் தெரிந்த அவர் அப்படிக் கூறியும் என் மனம் திருப்தி அடையவில்லை . பிறகு காப்பி சாப்பிட்டுவிட்டு, எல்லோருமாக, அன்று காலை பெங்களூரில் “புஷ்பக்காட்சி” நடந்த இடத்திற்குப் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தோம். இதற்குள்ளாகப் பத்து மணியாகியும் என் தொண்டை அப்படியே யிருந்தபடியால், வெங்கடகிருஷ்ணப் பிள்ளையைப் பார்த்து, இதற்கு ஏதாவது மருந்து கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன்; அவர் இதற்கு வேறு ஒரு மருந்தும் உடனே கேட்காது, அரை அவுன்ஸ் பிராந்தி சாப்பிட்டால் சரியாகப் போய்விடும் என்று சொன்னார். அவர் வார்த்தையில் முழு நம்பிக்கையுடையவனாய், அப்படியே கொஞ்சம் பிராந்தி வரவழைத்து, அரை அவுன்ஸ் தண்ணீரில் விட்டு அதைச் சாப்பிட்டேன். அதற்கு முன் எப்பொழுதும் அதைச் சாப்பிட்ட வழக்கமில்லாத படியால், அது என் வயிற்றில் எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. உடனே சாப்பாடு சாப்பிட்டுவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று எனது நண்பர் தெரிவிக்க அப்படியே செய்தேன். அதனால் எரிச்சல் சற்றுத் தணிந்த போதிலும், என் தொண்டைக் கம்மல் மாத்திரம் தீரவில்லை.

அதன்பேரில் என் மனத்தில் திகிலடைந்தவனாய், எனது நண்பரிடம் அணுகி, மறுபடியும் அவரது அபிப்பிராயத்தைக் கேட்க, அவர் சற்று உலாவினால் நல்லது என்று சொல்ல, அவரும் நானும் இன்னும் சிலருமாக நாங்கள் இறங்கியிருந்த “ஆஸ்பார்ன் அவுஸ்” என்னும் வீட்டிலிருந்து, நாடகம் நடத்தவேண்டிய இடமாகிய கப்பன் நாடகசாலைக்கு நடந்து போனோம். வேகமாய் நடந்ததனால் எனக்குக் கொஞ்சம் குணமாயிருந்தது போல் தோன்றியது. பிறகு, இதுவரையில் நான் பார்த்திராத அந்த நாடக சாலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, அங்கே வேஷம் தரிப்பதற்காக