பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

187


அமைக்கப்பட்டிருந்த கிரீன் ரூம்கள் ஒன்றில் பெரிய சோபாக்களும், கட்டில்களும் போடப்பட்டிருந்ததைக் கண்டு ஒருவேளை படுத்துறங்கி விட்டால் உடம்பு செம்மையாகி விடும் என்று எண்ணினவனாய், நடந்து வந்த அலுப்பினால் களைத்தவனாய், படுத்து உறங்கி விட்டேன். அதுதான் அன்றைத் தினம் நான் செய்த இரண்டாம் பெரும் தவறென்று நினைக்கிறேன். தொண்டை யெல்லாம் சரியாகிவிடும் என்று தூங்கப் போய், “குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வந்தானாம்” என்கிற பழமொழிக்கிலக்காக, சாயங்காலம் நான்கு மணிக்கு நான் விழித்தெழுந்திருக்க, என் தொண்டை அடியுடன் அற்றுப்போய்விட்டது! முன்பாவது என் குரல் கொஞ்சம் கேட்டது; இப்பொழுது அதுவும் போய்விட்டது! “உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா” என்கிறபடி, காலையில் இருந்த குரலும் போய்விட்டது! ஒன்றும் தோன்றாதவனாய், பிரமித்துப் போய், எனது நண்பராகிய வெங்கட கிருஷ்ணப் பிள்ளையைக் கேட்க, அவர் “நீ தூங்கியிருக்கக் கூடாது, அதனால்தான் இப்படியாயிற்று” என்று கூறினார். இந்தப் புத்திமதியை நான் தூங்குமுன் கூறியிருந்தால் நலமாயிருக்கும். தூங்கி எழுந்த பின் கூறி என்ன பிரயோஜனம் என்று எண்ணினவனாய், வைத்தியப்பரீட்சையில் தேறின ஒரு வைத்தியரை வரவழைத்து, என் ஸ்திதியைக் கூறி, எப்படி யாவது என் தொண்டையைச் சரிப்படுத்தும்படியாக வேண் டினேன். அவர் என்னை நன்றாய்ப் பரிசோதித்துப் பார்த்து, தேர்ந்த புத்தியுடையவராயிருந்தபடியால் “நீ பிராந்தி சாப்பிட்டது தவறு; பேசாமல் சுபாவத்திற்கே அதை விட்டிருப்பாயானால், சாயங்காலத்திற்குள் உன் தொண்டை சரியாகிப் போயிருக்கும். இப்பொழுது நான் வேறொன்றும் செய்வற்கில்லை. தொண்டை மாத்திரைகள் ஒரு புட்டி தருகிறேன். அவைகளை ஒவ்வொன்றாகக் கறையும் வரையில் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிரு; கொஞ்சம் சுமாராக இருக்கும்” என்று சொல்லி, ஒரு புட்டி தொண்டை மாத்திரைகள் அனுப்பினார். அவர் சொன்னபடியே, அந்த மாத்திரைகளை ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். சாயங்காலமானவுடன் என்னுடைய இதர நண்பர்களெல்லாம் வேஷம் தரிப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். என் தொண்டையின் நிலைமையறிந்து அவர்களெல்லாம் துக்கப்