பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

189


யிலும், விரைந்து போய் தணல் சட்டி பக்கத்தில் உட்கார்ந்து, ஊதுகுழாயால் புகையைத் தொண்டையிற் படும்படி இழுத்துக்கொண்டிருந்தேன். வெளியிற் போய் எனது குரல் கேட்கிறதா என்று பார்த்துவந்த என் நண்பர்கள் சுமாராகக் கேட்கிறது என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தனர். இம்மாதிரியாக நான் வரும்படியான முதல் மூன்று காட்சிகளையும் கடந்தேன். நான் வரும்படியான நான்காவது காட்சியில், அதாவது “தோட்டக் காட்சியில்” நான் கோபத்துடன் பேச வேண்டியது அவசியமாயிருந்தபடியால், என் முழு சக்தியைக்கொண்டு கூவ வேண்டியதாயிற்று. அப்படிச் செய்யவே, அப்பிரயத்தனத்தினால், மறுபடியும் என் குரல் போகும் போலிருந்தது. இதற்கப்புறம், எனக்கு மிகவும் கஷ்டமான, நான் முன்பே பன்முறை குறித்துள்ள “இரும்புச் சங்கிலிக் காட்சி” வருகிறது. இக்காட்சியில் எப்படியாவது என் குரல் சரியாக இருக்க வேண்டுமென்று கோரிக்கொண்டிருந்தேன்.

இதில் நான் தவறுவேனாயின், நாடகம் அதோகதியாய் விடுமே என்று மிகவும் பயந்தவனாய், அந்தக் காட்சியில் நான் மேடைக்குப் போகுமுன், அதுவரையில் நான் உட்கொண்ட மாத்திரைகள் தவிர மிகுதியாயிருந்த மாத்திரைகள் அவ்வளவையும், வாயில் போட்டுக்கொண்டு நெறநெறவெனக் கடித்து விழுங்கிவிட்டு, அக்காட்சியில் சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், மேடையின்மீது குதித்து, நான் ஆக்டு சரியாக நடிக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணம் தவிர வேறொன்றையும் கவனியாதவனாய், என் முழு பலத்தைக்கொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்; இந்தக் காட்சியில் இவன் குரல் எப்படியாகுமோ என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த எனது நண்பர்கள் எல்லாம் சம்பந்தத்திற்குப் பழைய குரல் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டவர்களாய்க் கரகோஷம் செய்தனர். நான் ஆக்டுசெய்தது நன்றாயிருந்ததென, வந்திருந்த ஜனங்களும் அங்ஙனமே செய்தனர் என்று நினைக்கிறேன். சாதாரணமாக நான் மேடையில் நடிக்கும் பொழுது வந்திருக்கும் ஜனங்கள் அதை நன்றாயிருக்கிறதென ஆமோதிக்கிறார்களா இல்லையா என்பதை நான் கவனிப்பதேயில்லை. ஆயினும் அன்று நான் அதை மிகவும் கவனித்தேன் என்றே சொல்லவேண்டும். சபையோர்களது கரகோஷமானது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. நான் புசித்த மாத்திரைகளின் பலன் பாதி,