பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

நாடக மேடை நினைவுகள்


சபையோரின் உற்சாகம் பாதி, என்னை அக்கஷ்டமான காட்சியை நன்றாக நடித்து முடிக்கும்படியாக உந்தியதென நான் கூற வேண்டும். இந்த இரும்புச் சங்கிலிக் காட்சியின் முடிவில் மனோஹரன் மூர்ச்சையாகிறான் என்று நாடகத்தில் எழுதியுள்ளேன். நான் அன்றிரவு நடித்தபொழுது, வாஸ்தவமாகவே மூர்ச்சையாகினேன் என்றே நான் உரைத்திடல் வேண்டும். அக்காட்சி முடிந்து திரை விழுந்ததும், எனது நண்பராகிய சாரங்கபாணி முதலியாரும் இன்னும் இரண்டு மூன்று ஆக்டர்களும் என்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய்ச் சோபாவின்மீது வளர்த்தியதாக, எனக்குக் கனவு கண்டது போலிருக்கிறது. இதன் பிறகு நாடகம் முடியும் வரையில் நான் இரண்டு காட்சிகளில்தான் நடிக்கவேண்டி யிருந்தது. அக்காட்சிகளில் நான் பேசின வார்த்தைகள் அரங்கத்தின் மீதிருந்தவர்களுக்கே கேட்டிராது என்று நினைக்கிறேன். முந்தைய காட்சியில் நான் பட்ட சிரமத்தினால் என் குரல் அடியோடு அற்றுப் போய் விட்டது! அன்றிரவு இந்நாடகம் முடிந்த பொழுது என் மனத்தில் தோன்றிய ஓர் எண்ணத்தை இங்கெழுதுகிறேன். எங்கள் சபையில் ஒவ்வொரு நாடக முடிவிலும் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் இராமலிங்க ஸ்வாமிகளின் திவ்யமான பாட்டொன்றைப் பாடி மங்களம் பாடுவது வழக்கம். இவ்வழக்கம் இதுவரையில் இடைவிடாது வழங்கி வருகிறது. எங்கள் சபை உலகிருக்குமளவும் அப்படியேயிருக்குமெனக் கோருகிறேன். இந்த வழக்கப்படி, மனோஹரன் நாடகம் அன்றிரவு முடிந்த உடன், எல்லா ஆக்டர்களும் வரிசையாக நின்று “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” எனும் பாட்டைப் பாட ஆரம்பித்தோம். இப்பாட்டை அறிந்தவர்கள் தெய்வ வணக்கமான பாட்டுகளுள் இது ஒரு மிகவும் உருக்கமான பாட்டு என்பதை அறிவார்கள்; இந்தப்பாட்டை மற்றவர்களுடன் கூடி நான் பாடும்பொழுதுதான், அன்று காலை எழுந்தது முதல் அதுவரையில், என்னைப் படைத்த ஈசனை நான் தொழவில்லை என்பது எனக்கு ஞாபகம் வந்தது! எனது பத்தாம் வயது முதல், என் தாயார் ஒரு நாள் எனக்கு உபதேசித்தபடி, குறைந்தபட்சம், போஜனங்கொள்ளுமுன், இரண்டு முறையாவது பகல் இரவில், சுவாமியைத் துதிக்காத நாளில்லை. நோயாயிருக்கும் காலத்தில்கூடப் பத்தியம் செய்யு முன் ஈசனைப் பிரார்த்தித்து விட்டே அதைக்கொள்வது என்