பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

நாடக மேடை நினைவுகள்


நல்லது, முக்கியமாகத் தொண்டைக்குப் பலன் கொடுத்து, நம்மை நன்றாய்ப்பாடவும் ஆக்டு செய்ய உதவும் என்று நம்பி மோசம் போகிறார்கள்.

முக்கியமாக நாடகமாடுவதையே ஜீவனமாக உடைய ஆக்டர்கள் பெரும்பாலார், இவ்வழக்கத்தை மேற்கொண்டு குடியர்களாகி விரைவில் கெட்டழிகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அன்றியும், ஆமெட்சூர் (Ameteurs) என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும், வேடிக்கை வினோதத்திற்காக நாடகமாடும் கற்றறிந்தவர்களுள்ளும் சிலர், கொஞ்சம் மதுவைச் சாப்பிடுவதனால் குரல் விருத்தியடைகிறது என்னும் கெட்ட தவறான அபிப்பிராயத்தை உள்ளவர்களா யிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவ்வாறு எண்ணுபவர்களெல்லாம் நான் அரை அவுன்ஸ் மதுவையுண்டு, அதனால் பட்ட பலனையும், கஷ்டத்தையும், பிராயச்சித்தத்தையும் படித்தறிந்தாவது அத் தவறான எண்ணத்தை விட்டொழிவார்களென்று கோரியே இதை இவ்வளவு விரிவாக எழுதலானேன். இதை வாசிக்கும் அநேகருள் ஒருவனாவது, இனிமேல் தான் மதுவை எக்காரணத்தினாலும் தீண்டுவதில்லை என்று பிரமாணம் செய்துகொண்டு அதன்படி நடந்து வருவதானால், ஈசனுக்கு, என்னைப் படைத்ததற்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறில், ஒரு கூறு செலுத்தினவனாவேன்!

இனி நாங்கள் பெங்களூரில் ஆடிய இரண்டாவது நாடகமாகிய “சாரங்கதரனை”ப் பற்றி எழுதுகிறேன்.

இந்த நாகடத்திற்கு அது வரையில் ஒரு ஒத்திகையும் நடக்கவில்லை என்பதை முன்பே குறித்துள்ளேன். வருகிற பொழுது ரெயில் வண்டியில் ஆக்டர்களுக்கு நான் படித்துக் காட்டியது தான். இதைப்பற்றி எங்களுடன் வந்த, தெலுங்கு வகுப்பைச் சார்ந்த ஒருவர் (அவர் பெயரைக் காட்ட இஷ்டமில்லை) கண்டக்டராகிய திருமலைப் பிள்ளையிடம் போய் குறை கூறிக்கொண்டாராம். அவர் நாகடத்திற்கு முந்திய நாள் என்னிடம் வந்து “என்ன சம்பந்தம்? சாரங்கதராவில் இன்னும் ஒருவரும் பாடம் படிக்கவேயில்லையாமே” என்று கேட்டார். அதன் மீது நான் “எல்லாம் சரியாகப் படித்திருக்கிறார்கள். “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம்” என்று பதில் உரைக்க, “ஆனால் இன்றையத் தினம் சாயங்காலம் நான் ஒத்திகை