பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

193


பார்க்க வேண்டும்” என்று சொன்னார். அதன் மீது என் ஆக்டர்களையெல்லாம் ரகசியமாக அழைத்து நடந்ததைக் கூறி “எப்படியாவது என் வார்த்தையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்; கூடுமாவனரையில் உங்கள் பாடத்தைப் படித்து வையுங்கள்; இன்று சாயங்காலம் ஒத்திகையில் ஏதாவது மறந்து போனால் நான் சொல்லிக் கொடுக்கமாட்டேன், சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி உங்கள் சொந்த வார்த்தையை உபயோகித்துக் கொண்டு, பூர்த்தி செய்து விடுங்கள்; உங்கள் பாடம் சரியா வராது என்பதை மாத்திரம் காட்டிக் கொடுக்காதீர்கள்” என்று சொன்னேன். அதன்மீது எனது நண்பர்களெல்லாம் கூடியமட்டும் தங்கள் வசனங்களைச் சரியாகப் படித்து வைத்தார்கள். பாட்டுகளுக்கு மாத்திரம் முன்பே ஒத்திகை செய்திருந்தேன். முன்பு மனோஹரன் நாடகத்திற்கே வேண்டிய பாட்டுகள் நான் கட்டக் கற்றுக் கொண்டேன். ஆகவே வேறொருவர் உதவியின்றி, இந்நாடகத்திற்கும் சென்னையிலிருக்கும் பொழுதே பாட்டுகளைக் கட்டிக் கொடுத்திருந்தேன். முக்கியமாக இந் நாடகத்தில் பாடினவர்கள் சுமந்திரன் வேஷம் தரித்த ரங்கசாமி ஐயங்காரும், ரத்னாங்கி வேஷம் தரித்த அ. கிருஷ்ணசாமி அய்யருமே.

சாயங்காலம் ஒத்திகை ஆரம்பிக்குமுன் என் சூழ்ச்சி எங்கு வெளியாகி விடுகிறதோ என்று நாடகம் எழுதியிருந்த புஸ்தகத்தை மெல்ல ஒளித்து வைத்துவிட்டேன். திருமலைப் பிள்ளை வந்து உட்கார்ந்தவுடன், “புஸ்தகம் எங்கேயோ இருக்கிறது. புஸ்தகத்தின் உதவியில்லாமலே ஒத்திகை நடத்துகிறோம் பாருங்கள்!” என்று சொல்லிக் கிருஷ்ணசாமி ஐயர், ரங்கசாமி ஐயங்கார், ஜெயராம் நாயகர், துரைசாமி ஐயங்கார், நான் முதலிய முக்கியமான ஆக்டர்கள் வரும் காட்சிகளை முதலில் எடுத்துக் கொண்டு, பரபரவென்று ஒத்திகை நடத்தினேன். இரண்டு மூன்று முக்கியமான காட்சிகளைப் பார்த்தவுடன் திருமலைப் பிள்ளை அவர்கள் நாங்கள் பாடம் படிக்கவில்லை என்று குறை கூறியவரைத் திரும்பிப் பார்த்து, “என்ன, ஒருவரும் பாடம் படிக்கவில்லை யென்று சொன்னாயே, எல்லாம் மிகவும் நன்றாய்ப் படித்திருக்கிறார்களே!” என்று கோபித்து மொழிந்து விட்டு, “எல்லாம் சரியாக இருக்கிறது, ஆக்டர்களை யெல்லாம் அதிகமாக அலட்டாதே” என்று சொல்லிவிட்டு ஏதோ