பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

நாடக மேடை நினைவுகள்


அலுவலாக வெளியில் போய்விட்டார். எப்படி முடியுமோ எவ்று பயந்து கொண்டிருந்த நான் மிகவும் சந்தோஷப் பட்டேன் என்றே சொல்ல வேண்டும்; திருமலைப் பிள்ளை தலை மறைந்தவுடன், என்னுடைய நண்பர்களெல்லாம், எங்கள் மீது குறைகூறிய அங்கத்தினரைச் சூழ்ந்து கொண்டு, ஏளனம் செய்ய ஆரம்பித்தனர். நான் அவர்களைத் தடுத்து, “இவர் நமக்கு நன்மையே செய்தார். இவர் இவ்வாறு குறை கூறியில்லாவிட்டால், நாம் எல்லாம் நமது பாகங்களை இவ்வளவு விரைவில் கஷ்டப்பட்டுப் படித்திருப்போமா?” என்று சொல்லி எல்லோரையும் சமாதானம் செய்து வைத்தேன். வாஸ்தவத்தில் அவர் எங்களுக்குத் தீங்கிழைக்கப்போய் அது எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது.

எங்கள் இரண்டாவது நாடகமாகிய “சாரங்கதரன்,” முதல் நாடகத்தைவிட மிகவும் நன்றாயிருந்ததெனப் பார்த்தவர்கள் சொன்னார்கள். முதல் நாடகத்திற்கு வந்திருந்தவர்கள், நன்றாயிருக்கிறதெனத் தங்கள் நண்பர்கள் முதலியோருக்குத் தெரிவிக்க, இரண்டாவது நாடகத்திற்கு முதல் நாடகத்தைவிட ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். முதல் நாடகத்திற்கு எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் 150 ரூபாய்தான் வசூலாகியது. இரண்டாவது நாடகத்திற்கு 250 ரூபாய்க்குமேல் வசூலாகியது. அந்த கப்பன் நாடகசாலை மிகவும் பெரியதல்ல; ஆகவே, நாடகசாலை முழுவதும் ஜனங்கள் நிரம்பியிருந்தனர். அன்றியும் ஆரம்ப முதல் கடைசிவரையில் ஒவ்வொரு காட்சியிலும் சபையோர்கள் கரகோஷம் செய்து தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தனர்.

இனி ஒவ்வொரு ஆக்டரும் நடித்ததைப்பற்றிச் சிறிது எழுதுகிறேன். முதலில் சித்ராங்கியாக வேடம் பூண்ட ஜெயராம் நாயகர் மிகவும் நன்றாய் நடித்தார்; இந்தப் பாகம் அவர் மேடையில் நடிக்கும் திறத்திற்கு மிகவும் பொருந்தியதாயிருந்தது. ஒன்றிரண்டு பாட்டுகள் பாடினாரோ இல்லையோ எனக்கு ஞாபகமில்லை. இந்த சித்ராங்கி பாகத்தில் பின் வந்தவர்களெல்லாம் அநேகம் பாடல்கள் பாடியிருக்கின்றனர். இவர் பாட்டு அதிகமில்லாமல் வெறும் வசனத்தினால் எல்லோரையும் சந்தோஷிக்கச் செய்தது மிகவும் மெச்சத்தக் கதே. எனது நண்பராகிய ஜெயராம் நாயகர் எங்கள் சபையில் ஸ்திரீ வேஷம் தரித்தது இதுதான் கடைசி முறை.