பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

197


தக்கபடிதான் ஆடையாபரணங்களை அணிய வேண்டுமேயொழிய, நமக்குக் கிடைக்கிறதேயென்று அதிகமாய் அணிவது பெரும் தவறாகும் என்பதே.

ஆண் வேடம் தரித்தவர்களுக்குள் சுமந்திரனாகத் தோன்றிய எம். வை. ரங்கசாமி ஐயங்கார் அன்றிரவு மிகவும் நன்றாய் நடித்தார். இவரது இனிய குரலினாலும் சங்கீதப் பயிற்சியினாலும், சபையோரை மிகவும் ரமிக்கச் செய்தார். இவர் அச்சமயம் சுமந்திரனாக நடித்தபொழுது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு வரைய விரும்புகிறேன். இந்நாடகத்தில் புறா விடுகிற காட்சி ஒரு முக்கியமான காட்சியென்று இதைப் படித்தவர்கள் அனைவரும் அறிவார்கள். ஆகவே, சாரங்கதரனுக்கொன்றும், சுமந்திரனுக்கொன்றுமாக இரண்டு புறாக்களை வாங்கி, இராத்திரி உபயோகிப்பதற்காக ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்தோம். இந்தக் காட்சி வந்தவுடன், சாரங்கதரனாகிய நான், விதூஷகனாக என்னுடன் நடித்துக் கொண்டிருந்த துரைசாமி ஐயங்காரை எங்கள் இருவருடைய புறாக்களையும் கொண்டு வரும்படி கட்டளையிட, அவர் உள்ளே போய் ஒரு புறாவை மாத்திரம் கொண்டு வந்து என் கையில் கொடுத்து, என் காதில் மற்றொரு புறா கூண்டில் இறந்து கிடப்பதாக மெல்லத் தெரிவித்தார்! இறந்த புறாவைக் கொண்டு எப்படிப் பந்தயம் விடுவது? நான் உடனே, “என்ன விதூஷகா? சுமந்திரன் புறாவை என்னிடம் கொடுத்தாயே!” என்று சொல்லி, அப்புறாவை ரங்கசாமி ஐயங்காரிடம் கொடுத்துவிட்டு, நான் உள்ளே சென்று மடிந்து கிடக்கும் புறாவைக் கையிலெடுத்துக் கொண்டு மரித்துப்போனதை ஒருவரும் அறியாதபடி வைத்திருந்து, ஆகாயத்தில் விடுவதுபோல, சைட் படுதாவுக்குப் போய் விட்டுவிட்டு வந்தேன்! வேறு நான் என்ன செய்வது? இறந்த அப்பட்சியைத் தொடுவதற்கே பிராம்மணராகிய துரைசாமி ஐயங்கார் சங்கோசப்பட்டார் என்றால், அதைக் கையில் வைத்திருந்து பிறகு அதைப்பந்தயம் விடுவதற்கு, அவரை விட வைதீகரான எம்.வை. கோபால்சாமி ஐயங்கார் எப்படி ஒப்புவார்? அந்தப் புறா பெங்களூரில் அப்பொழுது இருந்த குளிர்ச்சியினாலோ வேறெக் காரணத்தினாலோ இறந்து எங்களுக்கு இவ்வளவுகஷ்டத்தை விளைத்தது. இந்நாடகத்தை ஆட விரும்பும் என் இளைய நண்பர்கள் புறா விடுவதில்