பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

நாடக மேடை நினைவுகள்


கவனிக்க வேண்டிய ஒரு விஷயமிருக்கிறது. புறாவைப் பந்தயத்திற்காக விடுபவர்களும் ஒரு புறாவைக் கையிலெடுப்பதென்றால், அதன் இரண்டு கால்களையும் சற்று மடக்கி, ஒரு மாதிரியாகப் பிடிக்கவேண்டும். இல்லாவிட்டால் புறாவிற்கு ஹிம்சையாவதுண்டாகும் அல்லது அது எளிதல் கையினின்றும தப்பிப் பறந்தாவது போய்விடும். மற்றவர்கள் இந்த நாடகத்தை நடத்தும்பொழுது, இக்காட்சியில் அநேகம் ஆக்டர்கள் புறாக்களைத் தவறாகப் பிடித்துக் கொண்டு மேடையின்மீது வந்து கஷ்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று காலை அப்புவிடமிருந்து புறாக்களைக் கையில் எப்படிப் பிடிப்பது என்பதை நான் கற்றுக்கொண்டபடி, இந்நாடகத்தையாட. விரும்புவோர், புறாக்களுடன் பழகியவர்களிடமிருந்து தெரிந்து கொள்வார்களாக. செய்வன திருந்தச் செய்ய வேண்டும். ஆகவே இது ஓர் அல்ப விஷயமாயிருந்த போதிலும், இதையும் சற்று தக்கபடி நடத்த வேண்டும். இல்லாவிடில் புறாவைவிடும் ரசிகன் எவனாவது நாடகத்தைப் பார்க்க வந்திருந்தால், செய்தது! தவறெனக் கண்டுபிடித்து விடுவான்; அவன் மனம் கசந்து போகும்; அதற்கு இடங்கொடுக்கலாகாது.

விதூஷனாகிய “சுந்தரகன்” என்பவனாகத் தோன்றிய எம். துரைசாமி ஐயங்கார் அவர் விரும்பியபடி நாடக ஆரம்ப முதல் ஏறக்குறைய கடைசிக் காட்சி வரையில் அவருக்கு வேலையிருந்தபடியால், தனது பாகத்தை மிகவும் நன்றாய் நடித்து, சபையோரையெல்லாம் விடா நகைப்புடையவராக்கினார். இவர் சில வருஷங்களுக்குமுன் இளவயதிலேயே காலமானார். அது வரையில் தமிழிலும் தெலுங்கிலும் எங்கள் சபையில் அநேகம் ஹாஸ்ய பாகங்களில் இவர் நடித்திருந்தனர். இவற்றுளெல்லாம் அவரே மிக விரும்பியது இந்தச் சுந்தரகன் பாகமே. இவரிடமிருந்த ஒரு முக்கியமான நற்குணம் என்ன வென்றால், ஹாஸ்ய பாகங்களில் ஒரு முறை இதை இப்படி நடிக்க வேண்டுமெனச் சொல்லிவிட்டேனாயின், மறுமுறை கூற வேண்டியதில்லை. அன்றியும் நாடகத்தில் எழுதியிருப் பதற்குமேல் ஒரு வார்த்தையும் பேசமாட்டார். ஹாஸ்ய பாகங்களை நடிப்பவர்கள் இதை முக்கியமாகக் கவனிப்பார் களாக. எவ்வளவுதான் புத்தியுடையவர்களாயிருந்தபோதிலும், முக்கியமாக ஹாஸ்ய பாகங்களில் கிரந்த கர்த்தர் எழுதியதற்கு மேல் தங்கள் சுய புத்தியைக்கொண்டு; வேடிக்கையாய்ப்