பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

201


போதிலும், ஆண் மக்களுக்கு அது உசிதமாகாது. அவன் அறியாத்தனம் அவனை ஹானியிற் படுத்தியது; தர்மலோபமன்று. அன்றியும் தன் உயிர்த் தோழனான சுமந்திரன் வார்த்தைகளைக் கேளாது அவன் சித்ராங்கியிருக்குமிடம் சென்றது பெருந்தவறாகும். அதற்கு அவன் தன் உயிரைக் கொடுத்துப் பிராயச்சித்தம் செய்ய வேண்டியது நியாயமே. பிறகு இந் நாடகத்தை, ஒரு முறையோ இரண்டு முறையோ, வெளியூர்களில் ஆடிய பொழுது, மேற்சொன்னபடி சுபமாய் முடித்தபோதிலும் பெரும்பாலும் துக்ககரமான முடிவுடனேயே இதை முடித்திருக்கிறேன். நான் எழுதிய நாடகங்களில் நான் ஆடிய நாடகப் பாத்திரங்கள், பிறகு எங்கள் சபையில் அநேகர் ஆடியிருக்கின்றனர். ஆயினும் இந்த சாரங்கதர நாடகப் பாத்திரம் மாத்திரம், வேறெவரும் இதுவரையில் தமிழில் ஆடியதில்லை . இதுவரையில் இந்த சாரங்கதர நாடகமானது எங்கள் சபையோராலும், இதர சபைகளாலும், என்னிடம் வைத்திருக்கும் கணக்கின்படி 198 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த நாடகமானது நான் எழுதியபடி நாடகமாடுதலையே ஜீவனமாக உடைய கம்பெனிகள் ஆடுகிறதில்லை. இதற்கு முக்கியமான காரணம், கதையை நான் முன்பு குறித்தபடி வேறுவிதமாக மாற்றியெழுதியதே என எண்ணுகிறேன்; ஆயினும் பல பாலநாடகக் கம்பெனிகள்மாத்திரம் இதை நான் எழுதியபடி பன்முறை நடித்திருக்கின்றனர். அவற்றுளெல்லாம் மதுரை ஜெகன்னாத ஐயர் கம்பெனி ஆடியதுதான் என மனத்திற்குத் திருப்திகரமாயிருந்தது. அக் கம்பெனியார் சென்னையில் இந்நாடக்தை முதல் முறை என் அனுமதியின்மீது நடித்தபொழுது என்னை வரவழைத்தார்கள். நானும் எனது நண்பராகயி சி. ரங்கவடிவேலும் போயிருந்தோம். அப்பொழுது சித்ராங்கியாக நடித்த குமாரசாமி என்னும் சிறுவன் சி. ரங்கவடிவேலு நடிப்பது போலவே நடித்தான். நான் இதைக் கண்டு ஆச்சரியங்கொண்டவனாய், “இச்சிறுவன் நீ சித்ராங்கியாக நடிக்கும் பொழுது எப்பொழுதாவது பார்த்திருக்கிறானா என்ன?"வென்று என் பக்கத்திலுட்கார்ந்திருந்த ரங்கவடிவேலுவை வினவ, ரங்கவடிவேலு புன்னகையுடன் “அப்படியில்லை. இவன் என்னிடம் வந்து பாடங் கற்றுக் கொண்டான். உங்களிடம் அதை இதுவரையில் ரகசியமாக வைத்திருந்தேன்” என்று விடை பகர்ந்தது எனக்கு நன்றாய்