பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

205


கொண்டிருக்கும் பொழுது, எங்களுடன் இருந்த அ. கிருஷ்ணசாமி ஐயர், “சம்பந்தம், உனக்கு ஆட்சேபணை யில்லாவிட்டால் நான் சித்ராங்கி பாகம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினார்; ஜலத்தில் மூழ்க இருந்தவனுக்கு அகஸ் மாத்தாய்த் தெப்பம் கிடைத்ததுபோல் சந்தோஷப்பட்ட வனாய், உடனே ஒப்புக்கொண்டேன். சித்ராங்கி பாகத்தில் ஜெயராம் நாயகர் நடித்ததை, பக்கத்திலிருந்து மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்தபடியால் நாடகத்திற்குக் கொஞ்சம் தினங்கள்தான் இருந்தபோதிலும் இவருக்கு அதை எடுத்துக்கொள்வது சுலபமாயிற்று. இந்த இடத்தில் எனது இளைய நண்பர்களெல்லாம் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு நல்ல ஆக்டர், ஏதாவது ஒரு பாகத்தை நடிக்கும்பொழுது, பக்கத்திலிருந்து முற்றும் கவனித்துக் கொண்டிருத்தல் அதிகப் பலனைத் தருவதாகும் என்பதே. கிருஷ்ணசாமி ஐயர் அவ்வாறு கவனித்தபடியால் தான் அவ்வளவு சீக்கிரத்தில் அந்தக் கடினமான சித்ராங்கி பாகத்தை எடுத்துக்கொள்ள சக்தி வாய்த்தது. “இவனிடமிருந்து நாம் கற்கவேண்டியது என்ன இருக்கின்றது?” என்று சொல்லி அவ்வாறு கவனியாது கிரீன்ரூமில் (நேபத்யத்தில்) உட்கார்ந்து கொண்டு தற்காலம் சில ஆக்டர்கள் செய்கிறபடி கதை பேசிக் கொண்டிருந்தால், இது சாத்யமாயிராது. ஆகவே இதை வாசிக்கும், நாடக மேடையில் நாம் பெயர் பெற வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்கள், சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் அதைக் கைவிடாது, தேர்ந்த ஆக்டர்கள் நடிக்கும் பொழுதெல்லாம் அவர்களைக் கவனித்துக் கற்றுக் கொள்வார்களாக. எவ்வளவுதான் ஒரு ஆக்டர் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று ஒத்திகைகளில் சொல்லிக் கொடுத்த போதிலும், அவனைப் பார்த்துக் கற்க வேண்டுமென்று விரும்புவோர்க்கு மேடையின் மீதேறி நடித்துக் காட்டுவதைப் போல் அவ்வளவு பிரயோஜனப்படாது.

இது காரணம் பற்றியே சென்ற நாற்பது வருஷங்களாகச் சமயம் வாய்க்கும் போதெல்லாம், கைவிடாது யாராவது சிறந்த ஆக்டர்கள் சென்னையில் வந்து நடிக்கும்போதெல்லாம், அவர்கள் இங்கிலீஷ்காரர்களாயினுமாகுக, ஆந்திரர்களாயினுமாகுக, கன்னட தேசத்தவர்களாயினுமாகுக, அவர்களைப் போய்க் கவனித்து வருகிறேன். “கற்றது கணைக்காலளவு கற்க