பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

நாடக மேடை நினைவுகள்


நின்றது கடலளவு” என்னும் பழமொழியின்படி, இன்னமும் கற்க விரும்புகிறேன். மேற்சொன்னபடி கிருஷ்ணசாமி ஐயர் சித்ராங்கியாக நடிக்க ஒப்புக் கொண்ட பொழுது, எங்கள் முக்கியமானகஷ்டம் தீர்ந்த போதிலும், அவருடைய பாகமாகிய ரத்னாங்கி வேஷத்திற்கு ஒருவரைச் சீக்கிரத்தில் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உடனே எங்கள் சபையிலிருந்து நடந்து போய், காயார் சி. தேசிகாச்சாரியார் என்பவரைப் பார்த்து, அவரை இந்த வேடம் பூணும்படி வேண்டிக் கொண்டேன். அவரும் இசைந்தார். அவர் இதற்குக் கெஞ்ச நாளைக்கு முன்பாகத்தான் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தார். அதுவரையில் தமிழ் நாடக மேடையில் ஏறினவரே அன்று. பள்ளிக்கூடத்தில் ஆங்கில நாடகத்தில் ஏதோ ஒரு முறை இரண்டு முறை அவர் ஆக்டு செய்ததாக எனக்கு ஞாபகம். இவர்ஸ்திரீவேஷத்திற்குப் பொருத்தமாயிருப்பார் என்று முன்பே எண்ணியிருந்தேன். இவரும் தான் ஸ்திரீ வேஷம் பூண வேண்டுமென்று தனக்கு இச்சையிருப்பதாக எனக்குத் தெரிவித்திருந்தனர். ஆகவே இந்த சமயம் வாய்ந்ததும் அவரை அணுகி நான் கேட்க, அவரும் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டனர்; ஆயினும் “ரத்னாங்கி பாகம் கொஞ்சம் பெரிதும் கஷ்டமாயினதுமாயிற்றே, இவ்வளவு சீக்கிரத்தில் நான் சரியாக அதைப் படிக்க முடியுமா?” என்று சந்தேகித்தார். “உனக்கு அந்தச் சந்தேகமே வேண்டாம், நான் எல்லாம் சரிப்படுத்திவிடுகிறேன்” என்று அவருக்கு உறுதி கொடுத்து, அந்த நான்கைந்து தினங்களும் அவருக்குச் சாயங்காலங்களில் ஒத்திகை செய்து கற்பித்தேன். அவர் மிகவும் நன்றாய் நடித்த விதத்தை அப்புறம் சொல்லுகிறேன்.

சென்னையில் சாரங்கதர நாடகத்தை முதல் முதல் நாங்கள் நடித்த பொழுது, பெங்களூரில் சுமந்திரனாக நடித்த ஸ்ரீமான் எம்.வை. ரங்கசாமி அய்யங்கார், யாது காரணத்தினாலேயோ அப்பாத்திரத்தை எடுத்துக்கொள்ளத் தடைப்பட்டது. அதன் பேரில் எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுதான் அதை நடிக்க வேண்டுமென்று என்னைக் கேட்டார். அவர் ஆண் வேடம் பூணுவது எனக்கிஷ்டமில்லாவிட்டாலும், அவர் வற்புறுத்துகிறாரேயென்று இசைந்தேன். என் நண்பருக்காக அவர் சக்திக்கேற்றபடி, சில புதுப் பாட்டுகளைக் கட்டிக் கொடுத்தேன்.