பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

209



எங்கள் சபையில் பல வருடங்களாகப் பெயர் பெற்ற எனது நண்பராகிய இவரைப்பற்றிக் குறையாகக் கூறுகிறேன் என்று இதை வாசிப்பவர்கள் எண்ணாதிருப்பார்களாக. அவரிடம் எனக்கு மிகுந்த நன்கு மதிப்புண்டென்பதை அவரும் அறிவார், மற்றவர்களும் அறிவார்கள். ஆயினும் அவர் ஆண் வேடமே எப்பொழுதும் பூணாதிருந்தால் நலமாயிருக்கும் என்பது என் அபிப்பிராயம். இதை அவரே ஒப்புக்கொள்வாரென்பது திண்ணம்.

இது காரணம்பற்றியே எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு சாரங்கதர நாடகத்தில் சிலமுறை சுமந்திரனாக நடித்த போதிலும், இதற்குப் பிறகு, அவரது ஆயுள் பரியந்தம் ஆண் வேடமேதரித்திலர். எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில், “ஆண் வேடம் எப்படி ஆடுகிறாய், நாங்கள் பார்க்க வேண்டும்” என்று எங்கள் சபையோர் சிலர் கேட்க அதற்கிணங்கி, இதற்கப்புறம் ஒரு முறைதான், “பேயல்ல பெண்மணியே’ என்னும் எனது நாடகத்தின் இடைக் காட்சியில், பின் பாட்டுக்காரனாக வந்தாரென நினைக்கிறேன்.

இச் சாரங்கதர நாடகத்தில், 1904ஆம் வருஷத்திற்குப் பிறகு, கிருஷ்ணசாமி ஐயருக்குப் பதிலாக, என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவே சித்ராங்கியாக எங்கள் சபையில் நடித்து வந்தார். இச் சித்திராங்கி வேஷத்தையாடிய பலரை நான் பார்த்திருக்கிறேன். எல்லோரையும்விட. சி. ரங்கவடிவேலுவே, மிகுவும் மெச்சத்தக்கபடி நடித்தார் என்பது என் ஆய்ந்த அபிப்பிராயம். சாதாரணமாக, கேவலம் சிற்றின்பப் பிரியையாக நடித்துக் காட்டுகிறார்கள்; இவர் ஒருவர் தான் அச்சித்ராங்கியை மேம்பட்ட குணமுடைய ஸ்திரீயாக எடுத்துக் காட்டியுள்ளார். நான் முன்பே கூறியிருக்கிறபடி, சாரங்கதரன் மீது பழி சுமத்திய குற்றமொன்று தவிர, நான் எழுதியிருக்கிறபடி, சித்ராங்கி வேறு ஒரு குற்றமுமுடையவளல்ல; நாடக ஆசிரிய னாகிய என் அபிப்பிராயப்படி, சித்ராங்கியின் நற்குணங்களை யெல்லாம் சபையோர் கண்டு அறியும்படி, நடித்துக் காட்டியவர் இவரே. இந்நாடகத்தில் இவர் சித்ராங்கியாக வருகிறார் என்று கேள்விப்பட்டால், இந்நாடகத்திற்கு வசூல் எப்பொழுதும் அதிகமாக வரும். இது சென்னையில் மாத்திரமன்று, வேறு இடங்களிற்போய் சுகுண. விலாச