பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

நாடக மேடை நினைவுகள்


சபையார் நாடகமாடும் பொழுதெல்லாம் அப்படியே. இவர் உயிருடன் இருந்தவரையில், எங்கள் சபை வெளியூருக்குப் போனபோதெல்லாம், மனோகரன், லீலாவதி, சுலோசனா முதலிய எங்கள் முக்கியமான நாடகங்களுடன் இதுவும் ஒன்றாக எப்பொழுதும் ஆடப்பட்டதென்றே சொல்ல வேண்டும்.

இவர், மேற்சொன்னபடி நாடகாபிமானிகளின் மனத்தைக் கவர்ந்ததற்கு, என்ன காரணங்கள் உள்ளன என்று எனக்குத் தெரிந்த வரையில் இங்குச் சற்று எழுதுகிறேன். இவர் 1895ஆம் வருஷமுதல், 1923ஆம் வருஷம் வரையில் சற்றேறக்குறைய 28 வருடங்கள், எங்கள் சபையில் முக்கியமான ஸ்திரீ வேடம் தரித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த இருபத்தெட்டு வருடங்களிலும் எந்தப் பாகம் தனக்குக் கொடுக்கப்பட்ட போதிலும், அதை முதலில் நன்றாக மனனம் செய்து விடுவார். ஒத்திகைகளில், “இந்தப் பாகம் எனக்கு நன்றாய்த் தெரியும், நான் நாடக தினத்தில் ஆடி விடுகிறேன்” என்று சிலர் சொல்வதுபோல் கூறாமல் ஒன்று தவறாது மணிப் பிரகாரம் எல்லா ஒத்திகைகளுக்கும் வந்து நடத்துவார். ஏதாவது நூதனமான பாகம் இவருக்கு நான் கொடுத்தால், அந்தப் பாத்திரத்தை எப்படி நடிப்பது என்கிற விஷயம் தன் மனத்தில் நன்றாய் ஊன்றுகிறவரையில் என்னை சும்மா விட மாட்டார். ஒரு முறைக்குப் பன்முறை அதை நடத்திக் காட்டும்படி வற்புறுத்துவார்; சொல்லிக் கொடுப்பதில் நான் தளர்ச்சியடைந்தாலும் அடைவேனேயொழியக் கற்றுக் கொள்ளுவதில் அவர்தளர்ச்சியடையமாட்டார். பிறகுதான் எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்குத் தக்கபடி பாட்டுகளை, என்னைக் கொண்டாவது, இதரர்களைக் கொண்டாவது கட்டிக் கொடுக்கச்செய்வார்; அப்பாட்டுகளெல்லாம் சந்தர்ப்பத்திற்குச் சரியாயிருக்கின்றனவா என்று என்னிடமிருந்து தெரிந்து கொண்டு, பிறகு சங்கீதம் சரியாயிருக்கிறதாவென, சங்கீதப் பயிற்சியில் தேர்ந்த எங்கள் சபை அங்கத்தினரைக் கொண்டு, சிட்சை சொல்லிக் கொள்வார். வேஷம் பூணுவதில் சிறிய விஷயங்களையும் கவனித்து, மிக விமரிசையாக வேஷம் தரிப்பார். கை கால்களுக்கும் வர்ணம் பூசிக்கொண்டு நகங்களுக்கும் தீட்டவேண்டிய வர்ணத்தைத் தீட்டுவார். இச் சந்தர்ப்பத்தில் நாடக மேடைமீது வரவிரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விஷயம் அறிவிக்க விரும்புகிறேன். சாதாரணமாக