பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

211


ஆக்டர்கள் முகத்தில் மாத்திரம் வர்ணத்தைப் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். மறதியினாலோ, அல்லது சோம்பலினாலோ கைகால்களுக்கு வர்ணம் தீட்டுவதில்லை சிலர். அது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எவ்வளவு அருவருப்பைத் தருகின்றது என்பது, வெளியிலிருந்து கண்ணால் கண்டவர்களுக்குத்தான் தெரியும். கை கால்களுக்கு வர்ணம் தீட்டுவதிலும், அதனுடன் நின்றால் போதாது; நகங்களுக்கும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தீட்டாவிட்டால், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித வியாதி பிடித்த அவயவங்கள் போலத் தோன்றும். இது சிறு விஷயமாயி ருந்தபோதிலும் இதை ஆக்டர்கள் கவனிப்பார்களாக.

ஆடையாபரணங்களை அணிவதிலும் எனது உயிர் நண்பர் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பார். சேலை கட்டுவதில் ஏதாவது கொஞ்சம் தப்பாகச் சுருங்கலாக இருந்த போதிலும், அவிழ்த்துத் திருப்பிக் கட்டுவார். ‘இதென்ன? அல்ப விஷயம்! இதை யார் கவனிக்கப் போகிறார்கள்’ என்று சும்மா இருந்து விடமாட்டார். எல்லா விஷயங்களிலும் இவர் இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டபடியால்தான், அவர் மேடையின் மீது தோன்றும் பொழுதெல்லாம், ஸ்திரீகள் உட்பட வந்திருப்பவர்களெல்லாம் சந்தோஷப்படும்படி இருந்தது. ஒரு முறை எங்கள் சபையின் நாடகமொன்றில் நடந்த விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். காலஞ்சென்ற ராவ்பகதூர் அநந்தாசார்லு, சி.ஐ.இ. அவர்கள் ஒருமுறை தமிழ் நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஓர் ஆங்கில மாதை விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அழைத்துக்கொண்டு வந்தார். பாதி நாடகம் நடந்த பிறகு அரங்கத்தில் வெகு விமரிசையாக நடித்துக்கொண்டிருந்த சி.ரங்கவடிவேலுவைப் பார்த்து இது யார் என்று கேட்க, அநந்தாசார்லு அவர்கள்; இவர் ஒரு ஹைகோர்ட்டு வக்கீல் என்று தெரிவித்தார். “ஆடவனா அது? நான் நம்பவில்லை” என்று சொல்லி, அநந்தாசார்லு இடைக் காலத்தில் (Interval) நேபத்யத்துக்குள் அம் மாது சிரோமணியை அழைத்து வந்து நேராக சி. ரங்கவடிவேலுவைக் காட்டியும், சந்தேகம் தெளியாதவராய், “இப்பெண் ஆண் பிள்ளையா!” என்று கேட்டார்கள்! அவரை முதன் முதல் அரங்கத்தில் பார்க்கும், அதற்கு முன் அறியாத பலர், அவர் பெண் பிள்ளையே என்று எண்ணிமருண்டது எனது நண்பர்கள் பலர் அறிந்த விஷயமே.