பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

213


பிறகு தம்புச்செட்டி தெருவிலேயே, தற்காலம் ஒ. கந்தசாமி செட்டியார் இருக்கும் வீட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வீட்டின் மெத்தையில் ஒரு பாகம் வாடகைக்கு நாங்கள் எடுத்துக் கொண்டபடியால், தினம் சபையின் அங்கத்தினர் சபைக்கு வந்துபோக இடமுண்டாயிற்று. எங்கள் சபையின் வளர்ச்சியில் இதை இரண்டாவது பிரிவாகக் கொள்ளலாம். இந்தப் புது வீட்டில் எங்கள் சபை கிரஹப்பிரவேசசடங்கை என் தமயனார் ப. ஐயாசாமி முதலியார் எம்.எ.பி.எல். 1896ஆம் வருஷம் மார்ச்சு மாசம் 11ஆம் தேதி நடத்தி வைத்தார். இது முதல் சாயங்காலங்களில் சதுரங்க ஆட்டம், சீட்டாட்டம் முதலியன சபையில் அங்கத்தினருடைய சௌகர்யத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அன்றியும் இதுவரையில் காரியதரிசியும் பொக்கிஷ தாரும் ஒருவரே இருந்ததை மாற்றி, காரியதரிசி வேறு பொக்கிதார் வேறாகப் பிரிக்கப்பட்டது. அன்றியும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சபைக்கு வேண்டிய நாற்காலிகள் முதலியன வாங்க ஆரம்பித்தோம். எங்கள் சபை மற்ற சபைகளைப்போல் அல்லாமல் இத்தனை வருஷம் வாழ்ந்து வந்ததற்கு முக்கியக் காரணம், நாங்கள் இவ்வாறு கையிருப்புக் கேற்றபடி செலவழித்து, “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்னும் பழமொழியினைக் கைப்பற்றி நடந்ததேயாம் என்று நான் உறுதியாய்க் கூறலாம். எங்கள் சபையைப் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட அநேகம் சபைகள் அழித்து போனதற்கு ஒரு முக்கியக் காரணம், அவைகளெல்லாம் வரவுக்கு மிஞ்சின செலவு செய்ததே என்று நான் நம்புகிறேன். எங்கள் சபை முதலில் ஆரம்பித்த பொழுது மாதாந்தரக் கட்டணம் 4 அணாவாக இருந்தது. இவ்வருஷம் முதல் 8 அணாவாக உயர்த்தினோம். சபையின் செலவு கொஞ்சம் அதிகமாகவே, வரும்படியையும் அதிகப்படுத்த வேண்டிய மார்க்கம் தேடினோம்.

மேற்சொன்ன ஏற்பாடுகளன்றி இவ்வருஷம் எங்கள் சபையார் பல புதிய விஷயங்களை ஆரம்பித்தனர். அவற்றுள் முக்கியமானது எங்கள் சபையின் ஆதாரணையிலும் செலவிலும் ‘இந்தியன் ஸ்டேஜ்’ என்ற பெயருடன் ஒரு மாதாந்திரப் பத்திரிகையைப் பிரசுரிக்க ஆரம்பித்ததே. இதற்கு, பத்திரிகைகளுக்கு எழுதுவதில் அப்பொழுதே தேர்ச்சியடைந்திருந்த எனது பால்ய நண்பராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பத்திராதிபராக ஏற்படுத்தினோம். இப்பத்திரிகை