பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

நாடக மேடை நினைவுகள்


யானது ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் நன்றாய் நடந்தேறிய போதிலும், அதற்கு வேறு யாருடைய பரிபாலனமும் இல்லாதபடியால், சீக்கிரத்தில் நசித்துவிட்டது. அப்படி நசித்தது மிகவும் துக்ககரமான விஷயமே. சில வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் உத்தாரணம் செய்தபோதிலும் மறுபடியும் சில மாதங்களிருந்து உயிர் நீத்தது. இந்த இரண்டு முறையும் இப் பத்திரிகையானது ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்டது. எனது நண்பருடைய பிரயத்தனமெல்லாம் முடிவில் பயன்படாமற் போனது, தென் இந்தியாவின் தௌர்ப்பாக்கியமே என்று நான் உறுதியாய்க் கூறுவேன். இந்தப் பத்திரிகை நடந்தபொழுது எங்கள் சபையைப்பற்றி நான் ஆங்கித்தில் எழுதிய சில வியாசங்கள் இப்பொழுது இந்த நாடக மேடை நினைவுகள் எழுதுவதற்கு எனக்கு மிகவும் உபயோகப்பட்டன.

அன்றியும் இவ்வருஷம் டிசம்பர்மாசம் முக்கோடி ஏகாதசி அன்று சாரங்கதரன் என்னும் நாடகத்தை எங்கள் சபையார் மறுபடி ஆடிய பொழுது, “ருக்மாங்கத நாடகத்தை”யே தோற்றக் காட்சிகளாகக் காட்டினோம். இதை ஆங்கிலத்தில் “டாப்ளோவைவாங்” (Tableau Vivantes) என்று சொல்வார்கள்; இதை மௌனக் காட்சி என்று கூறலாம். இதுதான் முதன் முதல் இத்தகைய காட்சிகள் தமிழ் நாடக மேடையில் காட்டப்பட்டது. இதை நாங்கள் ஆரம்பித்ததற்கு ஒரு வேடிக்கையான காரணம் உண்டு. சாதராணமாக, சாயங்காலங்களில் நானும் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது, “என்ன சம்பந்தம், போட்ட நாடகங்களையே போட்டுக் கொண்டிருப்பதா? ஏதாவது புதியதாகச் செய்” என்று தூண்டினார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லி, வீட்டிற்குப் போனதும் யோசனை செய்து பார்த்தேன். முக்கோடி ஏகாதசிக்கு சாரங்கதர நாடகத்துடன், ருக்மாங்கத சரித்திரத்தையும் நாடகமாக எழுதினால் நன்றாயிருக்கும் என்று முதலில் யோசித்தேன். ஆயினும் நாடக தேதிக்குள் அதை எழுதி முடித்து ஒத்திகை போடுவது அசாத்தியமென யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் சில வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர்கள் தோற்றக் காட்சிகளாகக் சில கதைகளைக் காட்டியது ஞாபகம் வந்தது. உடனே ருக்மாங்கத சரித்திரத்தை அப்படி தோற்றக் காட்சிகளாகக் கஷ்டமின்றிக் காட்டலாமே! என்று யோசித்தேன். மறுநாள்