பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நாடக மேடை நினைவுகள்


சரசவினோத சபையார் அச்சமயம் நாடகங்கள் நடத்தியது வரை, சென்னையில் எனக்குத் தெரிந்தவரையில் திராவிட பாஷைகளில், கல்வியறிவுடைய பெரிய மனிதர்கள் ஒருவரும் நடித்ததில்லை. கொத்தவால் சாவடி முதலிய இடங்களில் எப்பொழுதுதாவது தெருக்கூத்தாடிகள் ஆடுவது தவிர, வேடிக்கைக்கன்றி தங்கள் ஜீவனமாக நாடகம் நடத்தும் இரண்டொரு நாடகக் கம்பெனிகளே இருந்தன. மேற்சொன்ன சுப்பராயாச்சாரி கம்பெனி அதில் ஒன்று; கவர்மென்ட் உத்தியோகத்திலிருந்ததைவிட்டு, நாடகமாடுவதையே தன் ஜீவனோபாயமாகக் கொண்ட காலஞ்சென்ற கோவிந்தசாமி ராவினுடைய “மனமோஹன நாடகக் கம்பெனி” ஒன்று. இரண்டாவது கூறிய கம்பெனி பட்டணத்துக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருதரம் வந்து, இரண்டு மூன்று மாதங்களுக்கு செங்காங்கடையில் கட்டியிருந்த ஓட்டுக் கொட்டகையில் தமிழில் புராண சம்பந்தமான சில நாடகங்களை நடத்துவதுண்டு. ஆயினும் அதனால் வரும் ஊதியத்திற்கின்றி, வேடிக்கையாக நாடகம் திராவிட பாஷைகளில் அதுவரையில் ஒருவரும் நடத்தியதேயில்லை . ஆகவே அவ்வருஷம், பல்லாரியில் வக்கீல் வேலையிலிருந்த கிருஷ்ணமாச்சார்லு என்பவர், கற்றறிந்து தன்னைப் போலவே வினோதத்திற்காகவே நாடகம் ஆடப் பிரியம் கொண்டு ஆடும் இதர அங்கத்தினருடன், சென்னைக்கு வந்து தெலுங்கு பாஷையில் முதல் முதல் நடித்த பொழுது, சென்னையில் ஒரு சிறு குழப்பத்தை யுண்டாக்கியது. கற்றறிந்த வக்கீல்கள் உத்தியோகஸ்தர்கள் முதலியோர் நாடகம் நடத்துகிறார்களென்று கேள்விப்படவே, சென்னையிலிருந்த அந்தஸ்துள்ள பெரிய மனிதர்கள் மேற்சொன்ன பல்லாரி கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் நடத்திய நாடகங்களைக் காணச் சென்றனர். என்னுடைய தமயனார்களில் ஒருவராகிய ஐயாசாமி முதலியாரும் அம்மாதிரி தன் சினேகிதர்கள் சிலருடன் சென்றனர். அவர் ஒரு நாடகத்தைப் பார்த்து வந்து மிகவும் நன்றாயிருந்ததெனப் புகழ்ந்து பேசினார். அதன்மீது நானும் அச்சபையார் நாடகங்களில் ஒன்றைப் பார்க்கவேண்டும் என்னும் இச்சை எனக்குப் பிறந்தது. அதுவரையில் தமிழ் தெலுங்கு நாடகங்களுக்கு நான் அறிந்த வரையில் போயிராத என் தகப்பனாரை, என்னை அழைத்துக் கொண்டு போகும்படி