பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

215


எனது நண்பருடன் கலந்து பேசினபொழுது அவரும் நன்றென ஆமோதித்தார். “தோற்றக் காட்சி அல்லது மௌனக்காட்சி” என்றால் இன்னதென எனது இளைய நண்பர்கள் சிலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே அதைச் சற்று விவரித்து எழுதுகிறேன். ஒரு கதையை அப்படிக் காட்டுவதென்றால், அக்கதையின் முக்கியமான காட்சிகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு காட்சியிலும் வரவேண்டிய ஆக்டர்களை, அக்காட்சிக்கேற்றபடி, முக அவயவ அபிநயங்களுடன் பதுமைகள் போல் அசையாமலிருக்கும்படி குறைந்தபட்சம் இரண்டு நிமிஷமாவது நிறுத்திவைப்பதுதான்.இதைப்படிக்கும் எனது நண்பர்கள் இதில் என்ன கஷ்டம், மிகவும் சுலபம்தானே என்று எண்ணிவிடலாம்.

ஏதாவது ஒரு நாடகத்தில் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு அக்காட்சியில் வரவேண்டிய ஒரு நாடகப் பாத்திரமாகத் தங்களைப் பாவித்து அக்காட்சியில் அப்பாத்திரம் என்ன முகப்பார்வையுடன், என்ன அங்க அபிநயத்துடன் நிற்க வேண்டுமென்பதை மனத்திற்கொண்டு, அப்படியே இரண்டு நிமிஷம்வரை அசையாது, மாறாது நின்று பார்த்தால் அப்பொழுதுதான் இதன் கஷ்டம் தெரியும். எங்கள் சபையின் ஆக்டர்களை முதன் முறை இவ்வாறு நிறுத்திவைக்க எனது பால்ய நண்பரும் நானும் பட்ட கஷ்டம் எங்களுக்குத் தெரியும். ருக்மாங்கத சரித்திரத்தை இப்படித் தோற்றக் காட்சிகளாக நடிக்க எங்கள் ஆக்டர்களுக்கு நாங்கள் ஒத்திகை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அப்பு என்னும் எங்கள் சபை வேலையாள், மறு நாள் என்னிடம் மெல்ல வந்து, இப்படித்தோற்றக்காட்சிகள் மேடையின்மீது காட்டும் பொழுது, மேடையின் முன்புறமாக ஒரு கொசுவலையை விட்டுக்காட்டினால், படங்கள் கண்ணாடியிலிருப்பதுபோல் ஜனங்களுக்குத் தெரியும் என்று சொன்னான். உடனே அவன் சொன்னது நல்ல யுக்தி என்று எனக்குத் தோன்றியது. பிறகு நான் இதை ஸ்ரீனிவாச ஐயங்காருக்குச் சொல்ல அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். அப்பு சொன்னபடியே ஒரு கொசு வலையை அரங்கத்தின் முன்பாக விட்டு, நாங்கள் இந்த ருக்மாங்கத சரித்திரத்தைத் தோற்றக் காட்சிகளாகக் காட்டிய பொழுது வந்திருந்தவர்களெல்லாம் மிகவும் நன்றாயிருந்ததென