பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

217


பாடிக்கொண்டு போகும்படிச் செய்தார். அது முதல் நாடகத்திற்குச்சம்பந்தமில்லாத ஒருவன் நாடகமேடையின் மீது தோற்றுவானாயின், “இவன் என்ன பாரதி பிரசாத்தா?” என்று ஏளனம் செய்வோம். இந்த கே. ஸ்ரீனிவாசன் ‘அமித்ரமித்ரா’ என்னும் இவ்வருஷத்திய நாடகத்தில் கதாநாயகனாகத் தோன்றி மிகவும் நன்றாய் நடித்தார். இவரிடமிருந்த முக்கியான நாடக மேடைக்கு அதி அவசியமானகுணம் ஒன்று என்னவென்றால், ஒரு பாட்டைப் பாடும்பொழுது அதன் வார்த்தைகள் எல்லாம் சபையோர் தெளிவாகக் கேட்டு அர்த்தம் அறியும்படி, ஸ்பஷ்டமாகப் பாடுவார் என்பதே.

இது ஓர் அரிய குணம் என்று எண்ணுகிறேன். சாதாரணமாக ஆக்டர்கள் மேடையின்மீது பாடும்பொழுது, பல்லவி, அது பல்லவி, சரணம், விருத்தம் முதலியவைகளில் சங்கீதத்தை விஸ்தரித்து சாஹித்யத்தைக் கேட்பவர்கள் அறியாதபடி பாடுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுதும் பெரும்பாலும் வழக்கமாயிருக்கின்றது. இது பெரும் தவறென எண்ணுகிறேன். சங்கீதத்தை மாத்திரம் கேட்க வேண்டுமென்றால் சாதாரணக் கச்சேரி சங்கீதமே போய்க் கேட்க வேண்டும். இதனால் நாடக மேடையில் சங்கீதமே கூடா தென்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், நாடக மேடையில் சாஹித்தியத்திற்கே பிரதான இடத்தைக் கொடுத்து, சாஹித்யம் பலரும் அறியும்படியாகப் பாட வேண்டுமென்பதே; ராக பாவத்தைக் காட்டவேண்டியது வெகு முக்கியமே; அதை விட்டு, ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்து, அந்த ஆலாபனையில் பாடும் பாட்டின் வார்த்தைகள் எங்கோ மறைந்து போகும்படிச் செய்வது நாடகத்திற்கு ஒழுங்கல்ல; முக்கியமாக நாடகமாடும் பொழுது நாடகப் பாத்திரம் கூறும் வசனங்களுக்கோ பாடும் பாட்டிற்கோ தக்கபடி முக அபிநயம் அமைந்திருக்க வேண்டும்; அப்படிச்சரியாக அமைந்திருக்கிறதா என்று சபையோர் பார்த்து ஆனந்தப்பட, நாடகப் பாத்திரத்தின் வாயினின்றும் வரும் வார்த்தைகளை அவர்கள் நன்றாகக் கேட்க வேண்டும். அப்படி ஸ்பஷ்டமாக அவர்கள் செவியில் வார்த்தைகள் கேட்கா விட்டால் என்ன பிரயோஜனம்?

நான் மேலே குறித்தபடி பாட்டுகளை ஸ்பஷ்டமாகப் பாடி சபையோரைக் களிக்கச் செய்தவர் இந்த கே. ஸ்ரீநிவாசன்